
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு ஒரு வகையில் போர் நடவடிக்கைதான் என அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது உலகின் மிகவும் சுவாரசியமான பாடமாக அமெரிக்கா மாறிவருவதாகவும், ஆனால் அது குறித்து விரிவாகக் கூற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இம்முறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக தன்னுடன் வணிகத் தொடர்பில் உள்ள நாடுகளான கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை 25% அதிகரித்துள்ளார். இதேபோன்று சீனா பொருள்களுக்கு 10% முதல் 20% வரை வரியை உயர்த்தியுள்ளார். இது சர்வதேச சந்தையில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
இதனிடையே டிரம்ப் வரி விதிப்பு குறித்து ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது வாரன் பஃபெட் பேசியதாவது,
''உயர்ந்துவரும் வரி விதிப்பு குறித்து எண்ணற்ற அனுபவங்களை நாங்கள் பெற்றுள்ளோம். ஒருவகையில் இது போர் நடவடிக்கைதான். பொருள்கள் மீதான வரி விதிப்பு விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இது இறுதியில் மக்களிடம்தான் அழுத்தத்தை ஏற்படுத்தும்'' எனத் தெரிவித்தர்.
தனது தலைமைக் காலத்தில் தங்கள் பெர்க்ஷியர் ஹேத்தவே நிறுவனம் 101 பில்லியன் டாலர்களை வரியாகச் செலுத்தியுள்ளதை மேற்கோள் காட்டிய அவர், ''உலகின் சுவாரசியமான பாடமாக அமெரிக்கா மாறி வருகிறது. ஆனால் அது குறித்து நான் பேசப்போவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அது குறித்து என்னால் பேச முடியாது'' எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து வாரன் பஃபெட் பேசுவது இது முதல்முறையல்ல; இதற்கு முன்பு 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பல்வேறு நேர்காணல்களில் டிரம்ப்பின் வரி விதிப்பானது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.