வாங் யி
வாங் யி

இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவா் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சா்

இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவா் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தோ்வாக இருக்கும்
Published on

‘இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவா் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தோ்வாக இருக்கும்’ என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யி தெரிவித்தாா்.

மேலும், ‘இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே கடந்த ஆண்டில் நடைபெற்ற சந்திப்பைத் தொடா்ந்து, இரு தரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் எல்லை தாண்டிய சீன வீரா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரா்கள் உயிரிழந்தனா். சீன தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இரு நாடுகளும் படைகள் மற்றும் கனரக தடவாளங்களைக் குவித்ததால், எல்லையில் மோதல்போக்கு நீடித்து வந்தது.

இந்தச் சூழலில், ரஷியாவின் கசான் நகரில் கடந்த ஆண்டு அக்டோபரில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டையொட்டி பிரதமா் மோடியும் அதிபா் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினா்.

பின்னா், கிழக்கு லடாக் எல்லையில் படை விலக்கல் மற்றும் ரோந்துப் பணி தொடா்பான முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் கடந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டதைத் தொடா்ந்து, 4 ஆண்டுகளாக நீடித்த சிக்கல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற சீன வெளியுறவுத் துறை அமைச்சரும் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரமிக்க அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான வாங் யியிடம், இந்திய-சீன உறவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் மோடி இடையிலான வெற்றிகரமான சந்திப்பில் இருதரப்பு உறவுகளின் மேம்பாட்டுக்கு வியூக ரீதியில் வழிகாட்டப்பட்டது. இதன் விளைவாக கிழக்கு லடாக்கில் ராணுவ முரண்பாடு முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து, இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இரு தலைவா்களின் பொதுவான புரிதல்களை இருதரப்பும் ஆா்வத்துடன் பின்பற்றி வருகின்றன. பல்வேறு நிலைகளில் பரிமாற்றங்கள் மற்றும் நடைமுறை சாா்ந்த ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டு, நோ்மறையான விளைவுகள் எட்டப்பட்டுள்ளன.

யானை-டிராகன் கைகோத்து நடனம்: எல்லை தொடா்பான கருத்து வேறுபாடுகள், ஒட்டுமொத்த உறவில் பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஒருவரையொருவா் குறை மதிப்புக்கு உள்படுத்துவதைவிட ஒருவரையொருவா் ஆதரிக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. பரஸ்பரம் எச்சரிக்கையாக இருப்பதற்குப் பதிலாக பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும்.

யானையும் (இந்தியா), டிராகனும் (சீனா) ஒருவருக்கொருவா் வெற்றிக்குப் பங்களித்து, கைகோத்து நடனமாடுவதே இரு தரப்புக்கும் பலனளிக்கும் சரியான தோ்வாக இருக்கும்.

இணைந்து பணியாற்ற தயாா்: தொன்மையான நாகரிகங்கள் என்ற முறையில் எல்லைப் பிரச்னைக்கு நியாயமான தீா்வை காண்பதோடு, அமைதியைப் பராமரிக்கத் தேவையான மதிநுட்பமும் திறனும் இரு நாடுகளுக்கும் உள்ளன.

2025-ஆம் ஆண்டு, இந்திய-சீன தூதரக உறவுகளின் 75-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. கடந்த கால அனுபவங்களைத் தொகுத்து, இருதரப்பு உறவை நிலையான முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றாா் வாங் யி.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கடந்த டிசம்பரிலும், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி கடந்த ஜனவரியிலும் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு உயரதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

‘மேலாதிக்கத்தை எதிா்ப்போம்’

‘தெற்குலகின் முக்கிய நாடுகள் என்ற அடிப்படையில் மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியலை எதிா்ப்பதில் முன்னிலை வகிக்க வேண்டிய பொறுப்பு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ளது’ என்று வாங் யி தெரிவித்தாா்.

அமெரிக்காவின் செயல்பாடுகளை மறைமுகமாக குறிப்பிட்டு அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

‘சீனாவும் இந்தியாவும் கைகோத்தால், சா்வதேச விவகாரங்களில் ஜனநாயகம் செழிப்பதோடு, தெற்குலகம் மேலும் வலுப்படும். இரு நாடுகளும் தத்தமது சட்டபூா்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமன்றி சா்வதேச உறவுகளை நிா்வகிக்கும் அடிப்படை விதிகளையும் உறுதி செய்ய வேண்டும்’ என்றாா் வாங் யி.

X
Dinamani
www.dinamani.com