
பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பேரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது.
இந்த மீட்புப் போராட்டத்தில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், சில பிணைக் கைதிகள் பலியானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலூச் விடுதலை அமைப்பினர் சிறைப்பிடித்தனர்.
குவெட்டாவில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள கூடலர் மற்றும் பிரு குன்றி மலைகளுக்கு இடையிலான சுரங்கத்தில் ரயில் நுழைந்தபோது ரயில் மெதுவாக இயக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட பலூச் அமைப்பினர், தண்டவாளத்தை வெடிபொருள் வைத்து தகர்த்து ரயிலை சிறைப்பிடித்தனர்.
இந்த ரயிலின் 9 பெட்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த 400 பேர் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர். 9 பெட்டிகளையும் அந்த அமைப்பினர் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தத் தகவலை அறிந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த முதல்கட்டப் பணியின்போது பலூச் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். எனினும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருதரப்பிலும் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து முதல்கட்டமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 155 பேர் மீட்கப்பட்டு அவசர ஊர்திகளில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்கள் மனித வெடிகுண்டுகளாக மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக பலூச் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராணுவத்தின் மீட்புப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது.
எனினும் ராணுவத்தின் முயற்சியால் பலூச் அமைப்பினர் அடுத்தடுத்து கொல்லப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மக்கள் மீட்கப்பட்டனர். எனினும் இதில் எதிர்பாரா விதமாக சில பிணைக் கைதிகள் பலியாகியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்
ரயிலில் உள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த மீட்பு முயற்சிக்கு காலக்கெடுவைக் குறிப்பிட பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.
பாகிஸ்தான் அமைச்சர் தலால் செளத்ரி இது குறித்து பேசியதாவது,
’’மீட்புப் பணிகளில் 70 - 80 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் இந்த மீட்புப் பணி நிறைவடையும் காலத்தை குறிப்பிட்டு கூற இயலாது.
ரயில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பகுதியில் இணைய வசதி இல்லை. அதனால், சமூக வலைதளங்களில் பரவும் விடியோக்களில் உண்மைத்தன்மை இல்லை. அவை பாகிஸ்தானின் மற்ற சம்பவங்களில் எடுக்கப்பட்டவை. அவற்ர்றை நம்பி அச்சமடைய வேண்டாம்.
பிணைக்கைதிகளின் நிலையைக் கருத்தில்கொண்டு கூடுதல் அக்கறையுடன் வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர்’’ எனக் குறிப்பிட்டார்.
இறுதிக் கட்ட மீட்புப் பணி
மீட்புப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில பெண்கள் மற்றும் குழந்தைகளை தங்கள் அருகே அமருமாறு பயங்கரவாதிகள் வற்புறுத்தியுள்ளனர். அவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்திக்கொள்ள சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், தற்போது வரை 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்து 190 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவசர ஊர்திகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.