உலகின் முன்னணி தொழிலதிபரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் மகளான விவியன் ஜென்னா வில்சன் மஸ்க் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு கடந்த 20 ஆண்டுகளில் மொத்தம் 4 மனைவிகள் மற்றும் 14 குழந்தைகள் உள்ளனர். அதில் விவியன் ஜென்னா உள்பட 6 குழந்தைகள் முதல் மனைவியான ஜஸ்டின் வில்சனுக்குப் பிறந்தவர்கள். மஸ்க்கின் நியூராலிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஷிவான் சில்லிஸுடன் 4 குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார். இசைக் கலைஞரான கிரிம்ஸ் உடன் 3 குழந்தைகள் உள்ளனர்.
13- வது குழந்தை எழுத்தாளரான ஆஷ்லே க்ளேர் என்பவருடனும் (மஸ்க் இதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை), 14-வது குழந்தை மீண்டும் சில்லிஸுடனும் பிறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்க்கின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தையான விவியன் ஜென்னா வில்சன் ஆணாகப் பிறந்து தன்னை திருநங்கையாக அறிவித்துக் கொண்டவர். தன் மீது பல்வேறு அவதூறுகளை எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாகக் கூறும் ஜென்னா தற்போது அவரைப் பிரிந்து தனியே வாழ்கிறார்.
ஜென்னாவைப் பற்றி எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் ஒருமுறை குறிப்பிடும்போது ‘முழுவதும் போலியானவர்‘ என்று தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் பற்றி கடந்தாண்டு பேசிய ஜென்னா, “நீங்கள் ஒரு குடும்பத் தலைவர் அல்ல. தொடர்ச்சியாக பாலியல் உறவுகளில் இருப்பவர். உங்கள் குழந்தைகளைப் பற்றி பொய் பேசுவதை உங்களால் நிறுத்த முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஜென்னா பேட்டியளித்தார். அதில், மஸ்க்கை நினைத்து அவர் பயப்படுகிறாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜென்னா, “மஸ்க் ஒரு பரிதாபத்திற்குரிய (வளர்ந்த) ஆண் குழந்தை. நான் ஏன் அவரை நினைத்து பயப்படவேண்டும்? அவரிடம் அதிகாரம் இருப்பதாலா? இல்லை. நான் அவரை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
அவர் பணக்காரராக இருப்பதால் நான் பயப்படவேண்டுமா? அவர் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. அவர் எக்ஸ் தளத்தை சொந்தமாக வைத்திருந்தாலும் எனக்கு அதுபற்றி அக்கறையில்லை.
அவர் அடுத்தவர்களின் மதிப்பையும் கவனத்தையும் எப்போதும் எதிர்பார்ப்பவர். நான் அவரிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பேசுவதில்லை. நல்லவேளையாக அதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
மேலும், அமெரிக்காவில் மாற்று பாலினத்தவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தன்னை எவ்வாறு பாதித்தது என்று தெரிவித்த அவர், அது தன்போன்ற பல இளைஞர்களை குறிவைப்பதாகத் தெரிவித்தார்.
“நான் என்னைப் பற்றி என் அம்மாவிடம் கூறுவதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அறிவித்தேன். ஆனால், அதனை முதலில் என் அம்மாவிடம் தெரிவித்திருக்க வேண்டும். நான் பாலினம் குறித்த பயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிட்டேன். நான் ஒரு திருநங்கை என்பதை வெளிப்படையாக தெரிவிப்பேன்" என்று அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.