சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுப்பெற்று வருகின்றது...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சிந்து மாகாணத்தின் நௌஷாரோ ஃபெரோஸ் மாவட்டத்தில், சிந்து நதியில் கால்வாய் கட்டும் திட்டத்துக்கு எதிராக நேற்று (மே 20) அங்குள்ள நெடுஞ்சாலையை முடக்கி ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதனால், போராட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. பின்னர், அங்கு காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சிந்தி தேசிய ஆர்வலர்கள் வலுக்கட்டாயமாக அரசினால் மாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்தி தேசிய அமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டை தடுத்து நிறுத்த ஹைதரபாத் பிரஸ் கிளப்பின் அருகில் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும், அங்குள்ள சாலைகள் முடக்கப்பட்டு, சிந்து சபாவின் முக்கிய தலைவர்கள் பலர் மாநாட்டு அரங்கத்திலேயே காவலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, சிந்து இயக்கத்தின் வழக்கறிஞர்களின் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சிந்து நதியின் நீரை, பஞ்சாப் மாகாணத்தின் தெற்குப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்குக் கொண்டு செல்ல், பாகிஸ்தான் அரசு சர்ச்சைக்குரிய சோலிஸ்தான் நதி நீர்பாசனத் திட்டத்தை கடந்த பிப்.15 ஆம் தேதியன்று துவங்கி வைத்தது.

இதனால், தங்களது நீர்நிலைகள் முழுவதுமாக சீர்குலையும் என்றும் பெருநிறுவன விவசாயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஏராளமான சிந்து மாகாண ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த மார்ச் மாதம் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்து மாகாணத்தின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com