யேமன் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஹவுதிகளின் இறுதி விமானம் அழிப்பு!

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் யேமனின் விமானம் அழிக்கப்பட்டது.
இஸ்ரேலின் தாக்குதலில் யேமனின் விமானம் அழிக்கப்பட்டது.Khaled alshaief/எக்ஸ்
Published on
Updated on
1 min read

யேமன் தலைநகரிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையின் விமானம் அழிக்கப்பட்டது.

ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள, யேமனின் தலைநகர் சனாவிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (மே 28) வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

ஹவுதிகள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க யேமனிலுள்ள அவர்களது முக்கிய கட்டமைப்புகளை முழுவதுமாகத் தகர்ப்பதற்காக இஸ்ரேல் ’ஆபரேஷன் கோலடன் ஜுவல்’ எனும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஓர் பகுதியான, சனா விமான நிலையத்தின் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், இந்தப் புதிய தாக்குதல்களில் ஹவுதிகள் பயன்படுத்தி வந்த இறுதி விமானமும் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஹவுதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பயன்படுத்தி வரும் துறைமுகங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எனவும் சனாவிலுள்ள விமான நிலையம் மீண்டும் மீண்டும் அழிக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இத்துடன், ஹவுதிகளின் வான்வழிகள் மற்றும் கடல்வழிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, யேமனின் தேசிய விமான நிறுவனமான, யேமனியா ஏர்லைன்ஸின் நான்காவது விமானம் இன்று (மே 28) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக சனா பன்னாட்டு விமான நிலையத்தின் ஹவுதி அதிகாரி காலெத் அல்-ஷைஃப் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிரிகள் யேமனியா ஏர்லைன்ஸின் இறுதியா விமானத்தைக் குறிவைத்து தாக்கி அழித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு எதிரான போரில் காஸா பகுதியின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனவே, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது யேமனின் ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் மீதான முடக்கங்களை நீக்கிவிட்டால் இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஹவுதிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்! எங்கே? ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com