

ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடர் அருகே பல்ஹா மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 523,000 மக்கள் தொகை கொண்ட நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசர் இ ஷெரிஃப் அருகே 28 கி.மீ ஆழத்தை மையமாகக்கொண்டு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானதாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு பால்க் மற்றும் சமங்கன் மாகாணங்களில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும் 320 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷரபத் ஜமான் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்ட விடியோ செய்தியில் தெரிவித்தார்.
மசர்-இ-ஷெரீஃப்பில் உள்ள மசூதியின் ஒரு பகுதியும் சேதமடைந்தது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
தெற்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் காபூலில் உள்ள செய்தியாளர்களும், நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறியுள்ளனர். தொடர்ந்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து மூன்று பெரிய நிலநடுக்கங்களைச் தலிபான் அரசு சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.