

கடந்த 20 ஆண்டுகள் இல்லாத வகையில், அக்டோபர் மாதத்தில் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட நிறுவனங்கள், அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,53,074 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக சேலஞ்சர் கிரே & கிறிஸ்துமஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தப் பணிநீக்க நடவடிக்கை, செப்டம்பர் மாதத்தைவிட 183 சதவிகிதம் (54,064) அதிகமாகும். 2024 அக்டோபர் மாதத்தைவிட 175 சதவிகிதம் (55,597) அதிகமாகும்.
கடந்தாண்டில் 7,61,358 பேர் வேலை இழந்ததைவிட, நடப்பாண்டு அக்டோபரில் மட்டும் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2003 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு அதிகளவிலான பணிநீக்க நடவடிக்கை மேற்கொண்ட மாதமாக 2025 அக்டோபர் அமைந்துள்ளது. அதாவது, 22 ஆண்டுகளில் மிக அதிகளவிலான பணிநீக்க நடவடிக்கை.
எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு பேர் வேலை இழந்தனர்?
தொழில்நுட்ப நிறுவனங்களில் செய்யறிவால், நடப்பாண்டில் 1,41,159 பேர் வேலை இழந்த நிலையில் - அக்டோபரில் மட்டும் 33,281 பேர் வேலையிழந்துள்ளனர்.
சில்லறை விற்பனையாளர் துறையில் நடப்பாண்டில் 88,664 பேர் வேலை இழந்த நிலையில், அக்டோபரில் மட்டும் 2,431 பேர் வேலை இழந்தனர்.
துப்புரவு, பணியாளர்கள், அவுட்சோர்சிங் நிறுவனங்கள் போன்ற பிற வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களை உள்ளடக்கிய சேவைத் துறையில் - இந்தாண்டில் 63,580 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; அக்டோபரில் மட்டும் 1,990 பேர்.
அக்டோபர் பணிநீக்க நடவடிக்கையில் கிடங்குத் துறைதான் முன்னிலை வகிக்கிறது. கிடங்குகளில் பணியாற்றுபவர்களில், இந்தாண்டில் 90,418 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அக்டோபரில் மட்டும் 47,878 பேர் வேலை இழந்துள்ளனர்.
நுகர்வோர் பொருள்கள் நிறுவனங்கள், நடப்பாண்டில் 41,033 பேரை பணிநீக்கம் செய்துள்ளன. அக்டோபரில் மட்டும் 3,409 பேர்.
லாப நோக்கற்ற நிறுவனங்களும் அரசு நிதி மற்றும் அதிகரித்து வரும் செலவுகளால் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. 2024-ல் 5,329 பேர் மட்டுமே பணீநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் 419 சதவிகிதம் அதிகரித்து 27,651 பேரை பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையில் இந்தாண்டில் 16,680 பேர் வேலை இழந்துள்ளனர். கடந்தாண்டின் முதல் 10 மாதங்களில் 13,279 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டில் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி! ராகுல் காந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.