

சிரியா நாட்டின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷரா, அரசு முறைப் பயணமாக வரும் நவ.10 ஆம் தேதி அமெரிக்கா செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அல்-அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அதிபர் அசாதின் படைகளுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிப்படையின் தலைவர் அகமது அல்-ஷரா சிரியாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, அதிபர் அகமது அல்-ஷராவின் தலைமையிலான இடைக்கால அரசு சிரியாவுக்கு சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் மற்றும் ஆதாரவைக் கோரி வருகின்றது.
இந்த நிலையில், சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷரா வரும் நவ.10 ஆம் தேதி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் செல்வதாகவும், அங்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து உரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் மூலம், வரலாற்றில் அமெரிக்காவுக்குச் சென்ற முதல் சிரியா அதிபர் என்ற பெருமையை அதிபர் அல்-ஷரா அடைவார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஐஎஸ் பயங்கரவாதப் படைகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் கூட்டணியில் இணையும் ஒப்பந்தத்தில் அதிபர் அல்-ஷரா கையெழுத்திடுவார் என கடந்த சில நாள்களுக்கு முன்பு சிரியாவுக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் கூறியிருந்தார்.
இதனால், இந்தச் சந்திப்பில், சிரியாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது, அங்கு அமெரிக்காவின் ராணுவத் தளம் அமைப்பது குறித்தும், சிரியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலகில் முதல்முறை! ரூ.88 லட்சம் கோடி ஊதியம் பெறும் எலான் மஸ்க்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.