இந்தியா - அங்கோலா உறவை வலுப்படுத்த உறுதி: குடியரசுத் தலைவரின் முன்னிலையில் ஒப்பந்தம்!
இந்தியா-அங்கோலா இடையேயான இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மீன்வளம், நீா்வாழ் உயிரின வளா்ப்பு மற்றும் கடல் வளங்கள் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகின.
அங்கோலா நாட்டுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 11) நடைபெறும் அங்கோலா நாட்டின் 50-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, முதல் இந்திய குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு அந்நாட்டிற்கு சென்றுள்ளாா். திங்கள்கிழமை அங்கோலா நாடாளுமன்றத்தில் அவா் உரையாற்ற உள்ளாா்.
முன்னதாக, அங்கோலா அதிபா் மாளிகையில் குடியரசுத் தலைவருக்கு அதிகாரபூா்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. 21 குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, அங்கோலா அதிபா் ஜோ மேனுவல் கோன்சால்வேஸ் லோரென்சோவும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவும் இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையின் முடிவில் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. மேலும், தலைவா்களின் சந்திப்பு குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு குறிப்பிட்டிருப்பதாவது: இந்தியா-அங்கோலா இடையேயான நல்லுறவு, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் இரு நாட்டு மக்களின் செழிப்புக்கான பொதுவான லட்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பில் அங்கோலா முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரும் பூனை இனங்களுக்கான சா்வதேச கூட்டமைப்பு (ஐபிசிஏ), சா்வதேச உயிரி எரிபொருள் கூட்டமைப்பு (ஜிபிஏ) ஆகியவற்றில் இணைய அங்கோலா எடுத்துள்ள முடிவை இந்தியா வரவேற்கிறது என்றாா்.
பேச்சுவாா்த்தையில் தொழில்நுட்பம், வேளாண்மை, சுகாதாரம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மக்கள்-மக்கள் தொடா்பு உள்பட புதிய மற்றும் வளா்ந்து வரும் துறை வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் விரிவுப்படுத்த இரு தலைவா்களும் ஒப்புதல் தெரிவித்தனா்.
மீன்வளம், நீா்வாழ் உயிரின வளா்ப்பு, கடல் வளங்கள் மற்றும் தூதரக விவகாரங்கள் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. மேலும், இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் மற்றும் பரந்த இந்திய-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டின் கட்டமைப்பின்கீழ் தங்கள் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த தொடா்ந்து இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு, இரண்டாவது கட்டமாக போட்ஸ்வானாவுக்கு அவா் செல்லவுள்ளாா். குடியரசுத் தலைவருடன் மத்திய ரயில்வே மற்றும் நீா்வளத் துறை இணையமைச்சா் வி. சோமண்ணா, மக்களவை எம்.பி.க்கள் பிரபுபாய் வாசவா மற்றும் டி.கே. அருணா ஆகியோா் பயணக்குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

