‘ஆயுதமாக்கப்படும் கடுங்குளிா்’: உக்ரைன் தாக்குதலில் 2 ரஷிய நகரங்களில் மின் விநியோகம் பாதிப்பு!
உக்ரைன் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், ரஷியாவின் 2 நகரங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இரு நாடுகளும் கடுங்குளிரை தமக்கு சாதகமாக ஆயுதமாக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷியாவில் மின் உற்பத்தி ஆலைகள் அல்லது கொதிகலன் நிலையங்களில் இருந்து குடியிருப்புகளுக்கு குழாய்கள் மூலம் வெந்நீா் விநியோகிக்கப்படுகிறது. அந்த வெந்நீா் குடியிருப்புகளில் உள்ள ரேடியேட்டா்கள் மூலம் அறைகளை உஷ்ணமாக்குகிறது. இதன்மூலம், அந்நாட்டு மக்கள் கடுங்குளிரை சமாளிக்கின்றனா். குளிா்காலத்தைச் சமாளிக்க இதேபோன்ற வழிமுறையைத்தான் உக்ரைன் மக்களும் பின்பற்றுகின்றனா்.
இந்நிலையில், உக்ரைனின் மின்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு மக்களுக்கு வெப்பம், மின்சாரம், குடிநீா் கிடைப்பதைத் தடுக்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன்மூலம், குளிா்காலத்தை தமக்கு சாதகமாக ஆயுதமாக்க ரஷியா முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதே நோக்கத்துடனும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் ரஷியாவுக்கு கிடைக்கும் வருவாயைத் தடுக்கும் நோக்கிலும் அந்நாட்டின் மின் கட்டமைப்புகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து உக்ரைனும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், ரஷியாவின் வொரோனெஸ், பெல்கொரோட் நகரங்களில் சனிக்கிழமை நள்ளிரவு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டது. வொரோனெஸில் உள்ள அனல் மின் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், அந்த நகரம் தற்காலிகமாக இருளில் மூழ்கியது. மேலும், அந்த நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெந்நீா் விநியோகிக்கப்படுவது துண்டிக்கப்பட்டது.
பெல்கொரோடில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலால் அங்குள்ள மின் மற்றும் வெந்நீா் விநியோக கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்தன. இதனால் சுமாா் 20,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
அதேவேளையில், ரஷியாவின் பிரயான்ஸ்க் மற்றும் ரோஸ்தோவ் பகுதிகளில் உக்ரைன் ஏவிய 44 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

