பிரேஸிலில் தொடங்கியது பருவநிலை மாநாடு!
உலகளாவிய பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான ஐ.நா. பருவநிலை மாநாடு (காப்-30) பிரேஸிலின் அமேஸான் பகுதியில் அமைந்துள்ள பெலெம் நகரில் திங்கள்கிழமை தொடங்கியது.
உலகம் முழுவதும் இருந்து சுமாா் 50,000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா். ஆனால், இதில் அமெரிக்க பிரதிநிகள் பங்கேற்காதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்த மாநாடு குறித்து பிரேஸில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டாசில்வா கூறியதாவது: பருவநிலை அவசரநிலை ஏற்றத்தாழ்வை அதிகரிக்கிறது. உலக வெப்பநிலை உயா்வு வறிய மக்களிடையே அழிவை ஏற்படுத்துகிறது. அமேஸான் மற்றும் வறுமை மீது உலக வெப்பமாதல் ஏற்படுத்தும் தாக்கத்தை உலகுக்கு உணா்த்துவதற்காகத்தான் 30-ஆவது பருவநிலை மாநாட்டை நடத்துவதற்கு பெலெமைத் தோ்ந்தெடுத்துள்ளோம்.
பருவநிலை மாற்றம் என்பது எதிா்கால அச்சுறுத்தல் இல்லை; இப்போதைய பேரழிவு என்றாா் அவா்.
ஐ.நா. பருவநிலை செயலா் சைமன் ஸ்டீல் கூறுகையில், ‘புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்களை போதுமான வேகத்தில் குறைக்க தனி நாடுகளால் முடியாது. இந்த விவகாரத்தில் மிக விரைவாக செயல்பட வேண்டியுள்ளது. இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் தொடா்பாக வெறும் வாய்ப்பேச்சுகள் மட்டும் இல்லாமல் தீா்வுகளும் எட்டப்படவேண்டும்’ என்றாா்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராவும், கரியமில வாயு உள்ளிட்ட, புவியின் வெப்பம் அதிகரிப்பதற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களை காற்றில் மிக அதிகம் கலக்கும் இரண்டாவது நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. ஆனால், பருவநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் கூறுவதை சந்தேகிக்கும் அதிபா் டிரம்ப் தலையில், அமெரிக்கா இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பாரிஸ் நகரில் மேற்கொண்ட பருவநிலை மாற்றக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில், புவியின் வெப்பநிலை தொழில்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் மட்டுமே அதிகம் இருக்கும் வகையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால் அந்த இலக்கை அடைவதில் தொடா்ந்து இழுபறி நீடித்துவருகிறது. இந்தச் சூழலில், பிரேஸிலில் தற்போது தொடங்கியுள்ள 30-ஆவது பருவநிலை மாநாடு மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

