

அமெரிக்காவில் குடும்ப கலாசார முறையே இல்லாததால் முதியவர்கள் தனிமையில் விடப்படும் அவலமும், தனிமையிலேயே வாழ்ந்து மடியும் நிலையும் இருப்பது அனைவரும் அறிந்ததே.
அண்மையில், குடும்பத்தினர் யாருமின்றி, தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் மரணத்தைத் தழுவிய நிலையில், அதுபற்றி இந்தியர் வெளியிட்ட விடியோ, சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் சிந்து என்பவர் பகிர்ந்திருக்கும் விடியோவில், அமெரிக்காவில் நான் குடியிருக்கும் குடியிருப்பில் அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் 80 வயது முதியவர் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு என்று யாருமில்லை. நான் மட்டுமே அவரிடம் பேசுவேன். இன்று காலை முதல் அவரிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை என்பதால், என்னிடமிருந்த வீட்டின் மாற்று சாவியைப் பயன்படுத்தி வீட்டைத் திறந்து பார்த்த போது, அவரது உயிரற்ற உடல் மட்டுமே கிடந்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் குடும்ப கலாசாரமே இல்லை, பெற்றோரும் பிள்ளைகளை உடன் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை, பிள்ளைகளும் பெற்றோருடன் வாழ விரும்புவதில்லை. ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை, பெற்றோரை பிள்ளைகள் பராமரிப்பார்கள். எங்கிருந்தாலும் தொடர்பில் இருப்பார்கள். அந்த கலாசாரம் இங்கில்லாததால் ஏராளமான முதியவர்கள் தனித்துவிடப்பட்டு, தனிமையில் வாழ்ந்து எப்போது இறந்தார்கள் என்று கூட தெரியாமல் இறந்து போகிறார்கள்.
அந்த முதியவரைத் தேடி யாரும் வராவிட்டால், நானே இறுதிச் சடங்குகளை செய்வேன். வீட்டை விட்டு எங்கேயிருந்தாலும் நிச்சயம் குடும்பத்துடன் தொடர்பில் இருங்கள். இதுதான் அமெரிக்காவின் சோகமான உண்மை என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் பல வசதிகள் இருக்கலாம், ஆனால் பெற்றோர், உறவுகள், நண்பர்கள் இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்.
சிலரோ, இந்தியாவிலும் இந்த கலாசாரம் ஏற்பட்டு வருகிறது, இதனை உடனடியாக நிறுத்த வேண்டும், முதியவர்கள் தனிமையில் வாழும் நிலை அதிகரித்து வருகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.
உண்மையில், இந்தியாவிலும் முதியவர்கள் தனித்து விடப்படுவதும், அவர்கள் மெல்ல உறவினர்களிடமிருந்து மறக்கப்பட்டு, இறந்து, அவர்கள் எப்போது இறந்தார்கள், ஒரு நாளைக்கு முன்பா, ஒரு வாரம் முன்பா என்று தெரியாமலேயே இறந்து கிடக்கும் அவலங்களும் பரவலாக நடந்துகொண்டுதானிருக்கிறது.
மும்பையில் கடந்த 2023ஆம் ஆண்டில் இதுபோன்று 500க்கும் மேற்பட்ட முதியவர்கள் தனித்து விடப்பட்டு மரணம் அடைந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு இதுபோன்று பூட்டிய வீடுகளுக்குள் தனித்துவிடப்பட்ட முதியவர்கள் இறந்து கிடந்தது தொடர்பாக 5 சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது என்கின்றன தரவுகள்.
இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான குடும்பங்களில், ஆண்கள் பணி ஓய்வுபெற்று, வாழ்க்கைத் துணையை இழந்த பிறகு, குடும்பத்துடனான இணைப்பை இழந்து விடுகிறார்கள். பெண்களை விட, ஆண்கள்தான் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்தாலும், பணியை விட்டு விலகிய பிறகு, அந்த சமூக இணைப்பை புதுப்பித்துக் கொள்ளவோ, உயிரூட்டவோ இயலாமல் உலகிலிருந்து துண்டித்துக் கொள்ள நேரிடுவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.