

ஜார்ஜியா நாட்டில், துருக்கி ராணுவத்தின் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானத்தின் 20 பணியாளர்களும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி ராணுவத்திற்குச் சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று (நவ. 11) அஜர்பைஜான் நாட்டில் இருந்து துருக்கி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஜார்ஜியாவின் எல்லைக்குள் சென்றவுடன் அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜார்ஜியாவின் சிக்நாகி பகுதியின் அருகில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை சம்பவ இடத்துக்கு விரைந்த துருக்கி அதிகாரிகள் குழு, அங்கு சிதறிக்கிடந்த விமான பாகங்களைக் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், விமானத்தில் பயணித்த 20 ராணுவப் பணியாளர்களும் பலியானது உறுதி செய்யப்பட்டதாக, துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் யாசர் குளெர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, துருக்கி மற்றும் அஜர்பைஜான் இடையில் நீண்டகாலமாக ராணுவ கூட்டுறவுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதில், இருநாடுகளுக்கும் இடையில் ராணுவத்தின் முக்கிய சரக்குகள் மட்டுமே சி-130 ரக விமானங்கள் மூலம் கொண்டுச் செல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இஸ்லாமாபாத் கார் வெடி விபத்து: இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.