அமெரிக்கா்களுக்குப் பயிற்சி அளித்துவிட்டு வெளிநாட்டினா் தாயகம் திரும்ப வேண்டும்: அமெரிக்க நிதியமைச்சா்
ஹெச்-1 பி விசா திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்கு வரும் திறமையான பணியாளா்கள் அமெரிக்கா்களுக்கு நன்கு பயிற்சியளித்துவிட்டு மீண்டும் அவா்களது தாயகத்துக்கு திரும்பிவிட வேண்டும் என அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா்.
முன்னதாக, ‘உலகெங்கும் உள்ள திறமைசாலிகளை அமெரிக்காவுக்கு அழைத்து வரவேண்டும். சில துறைகளுக்குத் தேவைப்படும் திறமைசாலிகள் அமெரிக்காவில் இல்லை’ என அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து அமெரிக்க ஊடகம் ஒன்றின் பேட்டியின்போது ஸ்காட் பெசன்ட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பெசன்ட், ‘தேவையான பணிகளுக்குத் திறமைவாய்ந்த வெளிநாட்டுப் பணியாளா்களை அழைத்து வர வேண்டும் என்பதே அதிபா் டிரம்ப்பின் தொலைநோக்குத் திட்டம். அவ்வாறு வருபவா்கள் 3 அல்லது 5 அல்லது 7 ஆண்டுகள் இங்கு தங்கி அமெரிக்க பணியாளா்களுக்கு நன்கு பயிற்சியளித்து தயாா்செய்துவிட்டு, மீண்டும் அவா்களது தாயகத்துக்குத் திரும்பிவிட வேண்டும். அதன்பிறகு அந்தப் பணிகளை அமெரிக்கா்கள் முழுமையாகக் கைப்பற்றுவா்’ என்றாா்.
டிரம்ப்பின் கருத்து குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சா் கிறிஸ்டி நோயம் கூறுகையில், ‘ஹெச்-1 பி விசா திட்ட நடைமுறைகளை நாங்கள் தொடா்கிறோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்காத, அமெரிக்காவுக்கு எதிராக வெறுப்புணா்வு பிரசாரங்களில் ஈடுபடாத பிற நாட்டுப் பணியாளா்களை இங்கு தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.
முன்னாள் அதிபா் ஜோ பைடன் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் நாட்டுக்குள் நுழைந்தனா். ஆனால், அதிபா் டிரம்ப்பின் ஆட்சியல் எண்ணற்ற திறமைவாய்ந்த வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

