ஈரான் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்பு: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரான் நாட்டின் பலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்புடையதாக இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை தடை விதித்தது.
அணுசக்தி திட்டம், ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்கள் தயாரிப்பை மேம்படுத்தும் ஈரானுக்கு அழுத்தம் தரும் வகையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஈரான், சீனா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. அணுசக்தி உறுதிப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததையடுத்து, ஈரான் மீது கடந்த செப்டம்பா் மாதம் ஐ.நா. விதித்த தடைகளின் தொடா்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

