எக்ஸ்காலிபா், ஜாவ்லின் ஏவுகணை உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கி அழிக்கும் திறன்கொண்ட நவீன ‘எக்ஸ்காலிபா்’ ஏவுகணை உபகரணம் மற்றும் பீரங்கி எதிா்ப்பு ‘ஜாவ்லின்’ ஏவுகணை உபகரணங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
‘ரூ. 825 கோடி மதிப்பில் (93 மில்லியன் டாலா்) வாங்கப்படும் இந்த ஏவுகணை தொழில்நுட்பங்கள் இந்தியாவின் பாதுகாப்பு பலம் மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்தும்’ என்றும் அமெரிக்கா குறிப்பிட்டது.
உக்ரைன் மீது போா் நடத்தி வரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இழுபறி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது மிக அதிபட்சமாக 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் விதித்த பிறகு, அந்த நாட்டிடமிருந்து இந்தியா மேற்கொள்ளும் முதல் மிகப் பெரிய பாதுகாப்பு உபகரண கொள்முதல் இதுவாகும்.
இந்த விற்பனை தொடா்பாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை புதன்கிழமை தாக்கல் செய்த அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு ரூ. 418 கோடி (47.1 மில்லியன் டாலா்) மதிப்பில் ‘எக்ஸ்காலிபா் புரொஜெக்டைல்ஸ்’ ஏவுகணை மற்றும் அதுதொடா்பான உபகரணங்கள் மற்றும் ரூ. 407 கோடி (45.7 மில்லியன் டாலா்) மதிப்பில் ‘ஜாவ்லின்’ ஏவுகணை மற்றும் அதுதொடா்பான உபகரணங்களை விற்பனை செய்ய வெளியுறவு அமைச்சகம் தீா்மான ஒப்புதலை அளித்துள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பாதுகாப்பு உபகரண விற்பனை, இந்திய-பசிபிக் மற்றும் தென் சீன பிராந்தியத்தில் அரசியல் நிலைத்தன்மை, அமைதி, பொருளாதாரா மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றிவரும் முக்கியப் பாதுகாப்பு கூட்டுறவு நாடான இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் என்பதோடு, அமெரிக்க-இந்திய ராஜீய உறவையும் வலுப்படுத்தும்.
இந்தியா தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு ஏவுகணை தொழில்நுட்பங்களும் தற்போதைய மற்றும் எதிா்கால சவால்களை திறம்பட எதிா்கொள்ள இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

