

நியூயார்க்கின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோரான் மம்தானியை நாளை (நவ. 21) நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஸோரன் மம்தானி புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மற்றும் முதல் இஸ்லாமிய மேயராக வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி அவர் பதவியேற்கவுள்ளார்.
இந்தத் தேர்தலில், மம்தானிக்கு நியூயார்க் மக்கள் வாக்களிக்க வேண்டாமெனவும், அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை மம்தானி மீது அதிபர் டிரம்ப் முன்வைத்து வந்தார்.
இந்த நிலையில், நியூயார்க்கின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோரான் மம்தானியை நாளை வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் அலுவலகத்தில் (ஓவல் ஆஃபீஸ்) நேரில் சந்திக்கவுள்ளதாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பை உறுதி செய்துள்ள, மம்தானியின் செய்தித்தொடர்பாளர் டோரா பேகெக், மக்கள் பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் குறித்து அதிபர் டிரம்ப்புடன் மம்தானி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்ததாலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் வந்தால் அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதித்துள்ள பிடி உத்தரவின்படி அவரைக் கைது செய்வேன் எனவும் ஸோரான் மம்தானி கூறியிருந்தார்.
இதனால், அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் மம்தானிக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டு வந்தனர். இருப்பினும், 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஸோரான் மம்தானி நியூயார்க் நகரத்தின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தைவான் விவகாரம்: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.