

தாய்லாந்தில் பெண் ஒருவரின் உடல் தகனம் செய்ய கொண்டுவரப்பட்ட நிலையில், சவப்பெட்டியில் அவர் உயிருடன் இருந்ததைக் கண்டு அங்கிருந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.
பாங்காக்கின் புறநகரில் உள்ள நோந்தபுரி மாகாணத்தில் உள்ள வாத் ராத் பிரகோங் புத்தர் கோயில் உள்ளது. அந்த கோயிலின் முகநூல் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டது,
அந்த விடியோவில் வண்டி ஒன்றில் இறந்த பெண்ணின் உடல் வெள்ளை நிற சவப்பெட்டியில் கொண்டுவருவதும், அந்தப் பெட்டியில் படுத்திருக்கும் பெண் தனது கைகளையும், தலையையும் அசைப்பதுபோல் இருந்தது. இது அங்குள்ள கோயில் ஊழியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதுதொடர்பாக கோயிலின் பொது மற்றும் நிதி விவகார மேலாளர் பைரத் சூத்தூப் ஏபி-யிடம் கூறுகையில்,
பிட்சானுலோக் மாகாணத்திலிருந்து 65 வயது பெண்ணின் உடலை அவரது சகோதரர் தகனத்திற்காகக் கொண்டு வந்தார்.
அவரது சகோதரி இரண்டு வருடங்களாகப் படுக்கையில் இருந்ததாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இரண்டு நாள்களுக்கு முன்பு மூச்சு விடுவது நின்றதாகவும் அவர் கூறினார். அதன்பின்னர் சகோதரர் அவளைச் சவப்பெட்டியில் வைத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அந்தப் பெண் முன்னதாக தனது உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். அதிகாரப்பூர்வ இறப்புச் சான்றிதழ் இல்லாததால், உடல் உறுப்புகள் தானத்திற்கு ஏற்க மருத்துவமனை மறுத்துவிட்டது.
இந்த நிலையில், புத்தர் கோயிலில் இலவச தகன சேவை வழங்கி வந்ததை கேள்விப்பட்டு, அவரது சகோதரர் ஞாயிற்றுக்கிழமை சகோதரி உடலுடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். ஆனால் பெண்ணின் சரியான ஆவணம் இல்லாததால் தகனத்திற்கு மறுக்கப்பட்டது.
பெண்ணின் சகோதரருக்கு இறப்புச் சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை விளக்கிக் கொண்டிருந்தபோது, பெண் சவப்பெட்டியைத் தட்டும் சப்தம் கேட்டது. உடனே டிரக் வண்டியில் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியைத் திறந்ததும் அங்கிருந்தோர் திடுக்கிட்டார்கள். அந்த பெண் லேசாக கண்களைத் திறந்தும், அவரது கை, கால்களையும் அசைத்துள்ளார். பின்னர் சவப்பெட்டியை அவர் வெகு நேரமாகத் தட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக கோயில் மேலாளர் கூறினார்.
பின்னர், பெண்ணை மதிப்பீடு செய்து அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். பெண்ணின் மருத்துவச் செலவுகளைக் கோயில் ஈடுகட்டும் என்று மடாதிபதி பெண்ணின் சகோதரரிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அயோத்தி இந்தியர்களின் நம்பிக்கை சின்னம்! யோகி ஆதித்யநாத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.