

ஹாங்காங் நகரில், தாய் போ மாவட்டத்தில் வானுயர்ந்த கட்டங்களில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 128 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
ஹாங்காங் வரலாற்றில், மிக மோசமான தீ விபத்தில் சிக்கிய கட்டடங்களுக்குள் யாரேனும் நல்வாய்ப்பாக உயிருடன் இருக்கிறார்களா, உயிரிழந்தவர்களின் உடல்கள் இருக்கின்றனவா என்று தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு கட்டடமாகச் சென்று சோதனை செய்து வருகிறார்.
ஹாங்காங்கின், புறநகர் தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபக் நீதிமன்றத்தில் புதன்கிழமை பற்றிய தீ விபத்தில் குறைந்தது 128 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர்,
இந்த கட்டடங்களில் வாழ்ந்து வந்த 4,800 பேரில், சுமார் 900 பேர் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கட்டடத்தின் ஒரு பகுதியில் பற்றிய தீ, கட்டுமானப் பொருள்கள் மற்றும் மூங்கில் சாரங்களில் பரவியதால், அந்த வளாகத்தில் இருந்து எட்டு 32 மாடிகளைக் கொண்ட கட்டடங்களில், ஏழு கட்டடங்கள் தீக்கிரையாகின.
ஒட்டுமொத்த கட்டடங்களும் பற்றி எரிந்ததால்,மீட்பு பணிகளுக்கும், தீயைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளுக்கும், கடும் வெப்பம் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு கவ்லூனில் இருந்த ஒரு வணிகக் கட்டடத்தில் பற்றிய தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். ஆனால், அந்த தீ விபத்தைக் காட்டிலும் இந்த விபத்து மிகவும் ஆபத்தானதாக அமைந்திருந்தது. இதற்கு முன்பு, 1948 ஆம் ஆண்டு ஒரு கிடங்கு பற்றிய தீயில் 176 பேர் கொல்லப்பட்டனர் என்று நாளிதழ் செய்தி தெரிவித்திருக்கிறது.
ஹாங்காங் கட்டட தீ விபத்தின் பின்னணி பற்றி...
கட்டடங்கள் ஏன் தீப்பிடித்து எரிந்தன?
பழமையான இந்த அடுக்கக கட்டடங்களின் வெளிப்புறப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருள்கள் கட்டடங்களில் இருந்ததும், கட்டடங்களைச் சுற்றி மூங்கில் சாரங்கள் போடப்பட்டிருந்ததும், அதில் தீ பற்றியதுமே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.
இதற்கிடையில், மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக, கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் பொறியியல் ஆலோசகர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பற்றிய தீக்கு உதவும் வகையில், புதுப்பித்தல் பணியின்போது ஜன்னல்கள் சேதத்திலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பஞ்சுபேனல்கள் பொறுத்தப்பட்டிருந்தன.
கட்டட புதுப்பித்தல் பணி, தீ தடுப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படவில்லை. இவற்றுக்கு மேல், பலத்த காற்று தீ பரவ உதவியது.
பாதிக்கப்பட்ட கட்டடங்கள் பற்றி
ஹாங்காங் மக்களில் மூன்றில் ஒரு பங்கு, அரசின் வீட்டுவசதி ஆணைய குடியிருப்புகளில்தான் வாழ்கிறார்கள். வாங் ஃபுக் கோர்ட் தனியாருக்குச் சொந்தமானது, ஆனால் 1980களில் கட்டப்பட்டு, மானியத்துடன் விற்கப்பட்ட வீடுகள். பெரும்பாலான அடுக்ககங்களைப் போலவே, இந்தக் கட்டடங்களிலும் தீத்தடுப்பு அமைப்புகள் இருந்திருக்கவில்லை.
ஹாங்காங்கில், கட்டாய தீ பாதுகாப்பு அமைப்புகள் கட்டடங்களுக்கு தேவை என்ற திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பே, இவை கட்டப்பட்டுள்ளன.
ஹாங்காங்கின் 75 லட்சம் மக்கள் வாழும் பகுதி, பெரும்பாலும் மலைச்சரிவுகளிலும், நெரிசலான அடுக்குமாடிகளாகவும் இருக்கின்றன.
தீ விபத்து குறித்து ஹாங்காங் அரசு அதிகாரிகள் சொல்வது என்ன?
தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடினர். காரணம், அவர்களின் ஏணிகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் குழல்கள் 32 மாடி கட்டடங்களில் பாதியளவு அல்லது அதாவது 20 மாடிக்கும் கீழே மட்டுமே எட்டும் வகையில் இருந்ததே.
மற்றொரு பக்கம், கட்டடங்கள் முழுமையாக தீப்பற்றி எரிந்ததால், ஹெலிகாப்டர்கள் மூலம் தீயைக் கட்டுப்படுத்துவதை இயலாததாக்கின, அதிக வெப்பம், மக்களை கட்டடங்களுக்குள் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்கமுடியாமல் செய்தன. அது மட்டுமல்லாமல், கரும்புகை, தீயை விட வேகமாக மக்களை பலிகொண்டது என்கிறார்கள்.
உலகையே உலுக்கிய இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை அறிக்கை கரோனெர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரண்மாக, ஹாங்காங் நகரில் புதுப்பித்தல் பணி நடக்கும் கட்டடங்களில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்று தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறிய ஹாங் காங் தலைவர் ஜான் லீ, உயிர் பிழைத்தவர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவுவதற்கு அரசு உறுதியளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
உயிர் பிழைத்தும் வாழ்வை இழந்தவர்கள்
கட்டடங்களுக்குள் தீ பரவியபோது, முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்ட மற்றும் வெளியே இருந்த நூற்றுக்கணக்கானோர், பள்ளிகள் உள்பட பல்வேறு கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ளவர்களுக்கு உணவு, குடிநீர், தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் பலரும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை முன்வந்து செய்து வருகிறார்கள்.
கட்டடங்களைப் புதுப்புக்கும் பணிக்காகப் போடப்பட்ட சாரங்கள், கட்டடங்கள் தீக்கிரையாகக் காரணமாகி, 128 பேரின் உயிர்களை பலிவாங்கியதோடு, பல ஆயிரம் பேரின் வாழ்வை கேள்விக்குறியாக்கிச் சென்றிருக்கிறது.
எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே வந்தாலும், மறுபக்கம் அறியாமை மற்றும் கவனக்குறைவால் உயிர்பலிகள் நாள்தோறும் பதிவாகிக் கொண்டேதான் இருக்கிறது என்பது, வெறும் வாழ்தல்தான் முக்கியம் என மனிதகுலம் ஓடிக்கொண்டிருப்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.