
பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய பிலிப்பின்ஸ் நாட்டின் செபு மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி, செவ்வாய்க்கிழமை இரவு 7.29 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் போகோ நகரை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இடிபாடுகளில் காயங்களுடன் நூற்றுக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். செபு மாகாணத்தில் பல்வேறு நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், சற்றுநேரத்தில் திரும்பப் பெறப்பட்டது.
செபு மாகாணம் டான்பன்டயன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற மிகப் பழமையான தேவாலயமும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளது.
உலகில் பேரழிவு ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றான பிலிப்பின்ஸ், கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. மேலும், பிலிப்பின்ஸ் நாட்டை ஆண்டுக்கு சுமார் 20 புயல்கள் தாக்குகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.