
ஹமாஸ் போர் அமைதிக்கு தயாராகி வருவதாகவும் அதனால் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரிடையே இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த போரை நிறுத்துவதற்கு 20 அம்ச திட்டத்தை அறிமுகத்தினார் டிரம்ப். இதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் காலம்தாழ்த்தி வந்தனர்.
20 அம்ச திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் ஏற்காவிட்டால், இதுவரை யாருமே காணாத அளவுக்கு மிக மோசமான பேரழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்த டிரம்ப், ஏதேனும் ஒரு வழியில் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவோம் என்றார்.
டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தாலும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறையவில்லை. காஸா நகரத்தின் மீது இறுதிக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாகவும் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
"ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் அமைதிக்கு(போர் நிறுத்தத்திற்கு) தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். காஸா மீது குண்டுவீச்சு நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று டிரம்ப் ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஹமாஸ், தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கிறோம் என்றும் இதர விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.