
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரை நான்தான் இருதரப்பிடமும் பேசி பரஸ்பர வரி விதிப்பு முறையைப் பயன்படுத்தி நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இரு அண்டை நாடுகளுக்கு இடையே எழுந்தப் போரை, தான் வரி விதிப்பு நடவடிக்கையைப் பயன்படுத்தி நிறுத்தி வருவதாகவும், அது நல்ல முறையில் பயனளிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை விவரித்துள்ளார்.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவுக்கு வரி விதிப்பு முறை மிகவும் முக்கியமானது. இந்த வரி விதிப்பு முறையைக்கொண்டுதான் நாங்கள் அமைதியை நிலைநாட்டி வருகிறோம். வெறுமனே இதனால் பல நூறு கோடி டாலர்களை மட்டும் ஈட்டவில்லை, வரி விதிப்பை வைத்துத்தான் நாங்கள் அமைதியை நிலைநாட்டி வருகிறோம் என்றார்.
ஒருவேளை, நான் இந்த வரி விதிப்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தாவிட்டால், தற்போது உலகளிவில் நான்கு போர்கள் நடந்துகொண்டிருக்கும் என்றார்.
அதாவது, வரி விதிப்புகளை பிறப்பிக்கும் அதிகாரம் மட்டும் எனக்கில்லாமல் போயிருந்தால், ஏழு போர்களில், குறைந்தது நான்கு போர்களாவது நடந்துகொண்டிருக்கும். உதாரணமாக இந்தியா - பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் போருக்குத் தயாராகவே இருந்தனர். ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. வரி விதிப்பு முறையை வைத்து நான்தான் போரை நிறுத்தினேன் என்கிறார்.
உண்மையில், அவர்களிடம் நான் என்ன சொன்னேன் என்பதை சொல்ல விரும்பவில்லை. ஆனால், நான் சொன்னது நல்ல பயனை அளித்தது. வரி விதிப்பினால் வெறும் டாலர்களை மட்டும் சம்பாதிக்காமல், உலகளவில் அமைதியையும் கொண்டு வருகிறோம் என்று டிரம்ப் கூறுகிறார்.
ஆனால், பாகிஸ்தானுடனான போர் நிறுத்தப்படுவதற்கு, எந்த மூன்றாம் நபரின் தலையீடும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நான்கு நாள்கள் நடந்த போர் மே 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தகர்த்து அழித்தது இந்திய பாதுகாப்புப் படைகள். நான்கு நாள்களுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்திருந்தது.
எத்தனை முறை சொல்லியிருக்கிறார் டிரம்ப்?
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆரம்பத்தில், 10வது முறை கூறியிருக்கிறார், இது இத்தனையாவது முறை என்று செய்திகள் வெளியாகின. ஆனால், ஒரே நாளில், செய்தியாளர் சந்திப்பு, நிகழ்ச்சியில் உரை, சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு என பல முறை இதனைக் கூறி வந்ததல், கணக்கிட முடியாமல் போனது. ஒரே விஷயத்தை மூன்று இடங்களில் பதிவு செய்யும்போது ஒன்றாகக் கணக்கிடுவதா, மூன்றாகக் கணக்கிடுவதா என்ற குழப்பம் வேறு.
கிட்டத்தட்ட 35வது முறையோடு இந்த எண்ணிக்கைக் கணக்கு நின்றும் போனது. தற்போது, க்ரோக்கிடம் இது பற்றி தகவல் கேட்டால், அதுவும் இந்த கூற்றையே மெய்ப்பிக்கிறது. அதாவது அவர் இதுவரை 50 முறைக்கும் மேல் இதனைக் கூறிவிட்டதாகவும், கடந்த ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 18 ஆக இருந்ததாகவும் ஆகஸ்ட் மாதத்தில் 40வது முறையைத் தொட்டதாகவும் செப்டம்பரில் மட்டும் 10 முறைக்கு மேல் சொல்லி அரைச்சதம் விளாசியிருக்கிறார்.
தற்போது அக்டோபர் மாதம் வந்துவிட்டதால் இந்த எண்ணிக்கை 50க்கும் மேல் என்று சொல்லப்படுவதாகவும் அது தரவுகளை அலசி சொல்லியிருக்கிறது.
இதையும் படிக்க... அவிநாசி மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயர்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.