கோப்புப் படம்
கோப்புப் படம்

விமான சேவை மீண்டும் தொடங்குவது இந்திய உறவை மேம்படுத்த உதவும்: சீனா கருத்து

இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவது இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் மிகவும் சாதகமான முன்னேற்றமாக அமையும்
Published on

இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவது இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் மிகவும் சாதகமான முன்னேற்றமாக அமையும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவலின்போது சீனாவுடனான விமான சேவை நிறுத்தப்பட்டது. அதே ஆண்டில் கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாட்டு உறவு மோசமடைந்தது. பலகட்டப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லையில் இருதரப்பும் படைகளைத் திரும்பப் பெற்றன. இதனால் பதற்றம் தணிந்தது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்தியா, சீனாவுக்கு எதிராக தீவிரமான வரி விதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணக்கமாகச் செயல்பட முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பிரதமா் மோடி அண்மையில் சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்றாா். இந்நிலையில் இந்தியா-சீனா இடையிலான நேரடி விமான சேவை அக்டோபா் 26 முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜியு ஜியாகுன் இது தொடா்பாக கூறியதாவது:

நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கும் என்ற அறிவிப்பு இரு நாடுகளும் பரஸ்பரம் புரிதலையும், நம்பிக்கையையும் மேம்படுத்துவதில் எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதை வெளிக்காட்டுகிறது. கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீனாவில் அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் மோடி இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே நல்ல புரிதல் உருவானது.

நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவது இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் மிகவும் சாதகமான முன்னேற்றமாக அமையும்.

இந்தியா, சீனாவில் 280 கோடி மக்கள் உள்ளாா்கள். இரு நாடுகளும் நட்புறவை மேம்படுவது விரும்பத்தக்க விஷயம்.

இரு தரப்பு உறவை மேம்படுத்துவதிலும், நீண்டகாலம் நெருங்கிப் பணியாற்றும் வகையிலும் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற சீனா தயாராக உள்ளது. சீனாவும், இந்தியாவும் சிறந்த நட்பு, அண்டைநாடாகத் திகழ்ந்து பரஸ்பரம் வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com