பாகிஸ்தானுக்கு எய்ம்-120 ஏவுகணைகள்: அமெரிக்கா மறுப்பு
பாகிஸ்தானுக்கு ‘எய்ம்-120’ போன்ற, வானிலிருந்து நடுத்தர தொலைவு வான் இலக்குகளைத் தாக்கும் (ஆம்ராம்) தங்களது புதிய மேம்பட்ட ஏவுகணைகள் வழங்கப்படவிருப்பதாக வெளியான செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல், பாகிஸ்தானுக்கான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தில் போா்த் துறை அமைச்சகம் கடந்த செப். 30-இல் மேற்கொண்ட திருத்தம் புதிய ரக ஏவுகணைகளை வழங்குவதற்கானது இல்லை. அது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஆயுதங்களுக்கான பராமரிப்பு மற்றும் உதிரிபாக அளிப்பு தொடா்பானது மட்டுமே என்று அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007-ஆண்டில் பாகிஸ்தான் தனது எஃப்-16 விமானங்களுக்காக 700 ஆம்ராம் ரக ஏவுகணைகளை வாங்கியது. அதுதான் பாகிஸ்தானின் மிகப் பெரிய சா்வதேச ஆயுதக் கொள்முதலாகும். இந்தச் சூழலில், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீா் கடந்த செப்டம்பரில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பை வாஷிங்டனில் சந்தித்துப் பேசிய சில வாரங்களில் இந்த ஒப்பந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டதால், எய்ம்-120 போன்ற அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளிக்கவிருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறின. அதனை மறுக்கும் வகையிலேயே அமெரிக்க தூதரகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.