ஜப்பானில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைமையிலான ஆளும் கட்சிக் கூட்டணியில் 26 ஆண்டுகளாக அங்கம் வகித்த கொமேய்டோ கட்சி, அதில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதையடுத்து, எல்டிபி கட்சித் தலைவராக கடந்த வாரம் தோ்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான சனே தகாய்ச்சி (64) நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கொமேய்டோ கட்சியின் தலைவா் டெட்சுவோ சாய்டோ கூறுகையில், எல்டிபி கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கவலையளிப்பதால் கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தாா்
இந்த முடிவு வருத்தமளிப்பதாகக் கூறிய தகாய்ச்சி, இது சாய்டோவின் ஒருதலைப்பட்சமான முடிவு என்று சாடியுள்ளாா்.
ஏற்கெனவே, ஆளும் கூட்டணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை இல்லாத நிலை உள்ளது. இந்தச் சூழலில் கூட்டணியில் இருந்து கொமேய்டோ கட்சி விலகியுள்ளது. இருந்தாலும், பிற எம்.பி.க்களின் ஆதரவுடன் சனே தகாய்ச்சி பிரதமராவதற்கு இன்னும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.