ஒபாமாவுக்குக் கிடைத்த அமைதி நோபல் பரிசு டிரம்புக்கும் கிடைக்குமா? இன்று தெரியும்

ஒபாமாவுக்குக் கிடைத்த அமைதி நோபல் பரிசு டிரம்புக்கும் கிடைக்குமா என்பது இன்று தெரியும்
India Suspends Postal Services To US After Trumps Tariffs
அமெரிக்க அதிபர் டிரம்ப்கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

2025ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகவிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

உலகின் சில நாட்டுத் தலைவர்கள் சர்வதேச தலைவர்கள் உள்ளிட்ட பலரும் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைத்திருக்கும் நிலையில் டிரம்ப், தனக்கு அமைதி நோபல் பரிசு வழங்கப்படாவிட்டால் அது ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கே அவமானம் என்று வேறு கூறி வருகிறார்.

அப்ரஹாம் அகார்ட் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை நோபல் பரிசுக்கு முன்மொழியப் போவதாக நியூ யார்க் பிரதிநிதி கிளவுடியா டென்னி கூறியிருந்தார்.

இவர் மட்டுமல்லாமல், டொனால்ட் டிரம்ப் பெயரை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து இருக்கிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் இடையே சமரசப் பேச்சில் ஈடுபட்டதற்காக, பாகிஸ்தான் அரசும், கடந்த ஜூன் மாதம், டிரம்ப் பெயரை நோபலுக்கு பரிந்துரைப்பதாக அறிவித்திருந்தது.

நெதன்யாகுவும், ஜூலையில் இது பற்றி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆர்மீனிய பிரதமர் நிகோல் ஆகஸ்ட் மாதத்திலும், தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதியை ஏற்படுத்தியதற்காக கம்போடிய பிரதமர் ஹன் மனெட், அதிபர் டிரம்ப் பெயரை நோபலுக்குப் பரிந்துரைக்கப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

அதேவேளையில், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன், எகிப்து - எத்தியோப்பியா இடையே சண்டையை நிறுத்தினேன், அப்ரஹாம் உடன்படிக்கைக்கு உதவினேன், எனக்கு அமைதிக்கான நோபல் கொடுத்தே ஆக வேண்டும் என்ற வகையில் டிரம்பும் கூறி வருகிறார். ஆனால், இந்த ஆண்டுக்கான நோபல் யாருக்குக் கிடைக்கும் என்பது இதுவரை நோபல் குழுவினரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

இதுவரை அமெரிக்க அதிபர்கள் நான்கு பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 26வது அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட், 28 அதிபர் ஊட்ரோ வில்சன், 39வது அதிபர் ஜிம்மி கார்டெர், 44வது அதிபர் பராக் ஒபாமா என நான்கு பேருக்கு நோபல் வழங்கப்பட்டுள்ளது.

பராக் ஒபாமாவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தூதரக உறவுகளை வலுப்படுத்தியது மற்றும் மக்களிடையே மிகப்பெரிய ஒற்றுமையை ஏற்படுத்தியதற்காகவும் அவருக்கு நோபல் வழங்கப்பட்டது. நார்வே நாடாளுமன்றம், பராக் ஒபாமா பெயரை பரிந்துரை செய்திருந்தது. ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்த போது மட்டுமல்லாமல், அதன் பிறகும், ஒபாமா அறக்கட்டளை மூலமாக, இளம் தலைமுறையை தலைமைப் பொறுப்புக்கு உயர்த்தவது, பொதுச் சேவைகளில் ஈடுபடுத்துவது போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்களை நிறுத்தினாலும், ஐ.நா.வின் பல சேவைகள் அமைப்புகளுக்கான நிதியை நிறுத்தி, பல உயிர்களுக்கு அச்சுறுத்தலை டிரம்ப் ஏற்படுத்தியிருக்கிறார். ஒருவேளை, டிரம்புக்கு நோபல் அறிவிக்கப்படவில்லை என்றால், டிரம்பின் அதிகாரத்தால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்புகளுக்குக் கூட நோபல் வழங்கப்படலாம் என்ற கருத்துகளும் ஏற்கனவே வந்துவிட்டன.

தற்போது, தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று டிரம்ப் ஒற்றைக் காலில் தவமிருக்கும் நிலையில், ஒரு சில மணி நேரங்களில் அவரது தவத்துக்கு உரிய வரம் கிடைக்குமா? இல்லை இன்னும் சில காலம் தவம் தொடர வேண்டியது வருமா என்பது தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com