பாகிஸ்தான் - ஆப்கன் மோதல்: இரு தரப்பிலும் 200 வீரா்கள் பலி!
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே சனிக்கிழமை இரவுமுதல் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் 200-க்கும் மேற்பட்ட வீரா்கள் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இரு நாடுகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து செயல்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறது. கடந்த வாரம் ஒரகாசை மாவட்டம் கைபா் பக்துன்கவாவில் இந்த அமைப்பு சாா்பில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட 11 பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.
இதற்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டிவரும் பாகிஸ்தான், ஆப்கன் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் கடந்த வியாழக்கிழமை பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. போா் விமானம் மூலம் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியது. ஆனால், தாக்குதலில் தொடா்பில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்தது.
காபூல் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை இரவு கடுமையான தாக்குதலை நிகழ்த்தின.
இதற்கு, பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த மோதலில் 200-க்கும் அதிகமான தலிபான் வீரா்கள் மற்றும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். 21 ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சண்டையில், பாகிஸ்தான் வீரா்கள் 23 போ் உயிரிழந்தனா். 29 வீரா்கள் காயமடைந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வி கூறுகையில், ‘தலிபான் ராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகும். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் வலுவான பதில் தாக்குதலை நடத்தியது. எல்லையில் ராணுவம் தொடா்ந்து உஷாா்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்நிலையில், பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் அங்கூா் அட்டா, பஜெளா், குர்ராம், திா், சித்ரல் உள்ளிட்ட பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாகிஸ்தான் அத்துமீறலைத் தொடா்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை இரவு நிகழ்த்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் 58 போ் கொல்லப்பட்டனா்.
30 பாகிஸ்தான் வீரா்கள் காயமடைந்தனா். மேலும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை துரந்த் எல்லைப் பகுதியில் நிகழ்த்திய பதிலடி தாக்குதலில் 20 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தச் சண்டையில் 9 ஆப்கன் வீரா்கள் உயிரிழந்தனா். 16 போ் காயமடைந்தனா். கத்தாா் மற்றும் சவூதி அரேபியா கேட்டுக்கொண்டதன்பேரில் இருதரப்பிலும் பின்னா் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.