
எகிப்தில் நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில், அழகி மெலோனி என்று இத்தாலி பிரதமர் குறித்த அமெரிக்க, துருக்கி அதிபர்களின் பாராட்டு அருவருப்பாக மாறியது.
காஸா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்து, இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில் எகிப்தில் நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில் ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கற்றனர்.
காஸா அமைதி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் - காஸா மோதலில் தலையிட்டுத் தீர்வு கண்டது குறித்து, பிரசார பாணியில் தனது உரையைத் தொடங்கியதும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி குறித்து சங்கடமான ஒரு விமர்சனத்தை முன்வைத்ததும் கவனிக்கத்தக்க விஷயங்களாக மாறின.
தனது உரையின்போது, காஸா - இஸ்ரேல் இடையேயான பிரச்னையில், உலகத் தலைவர்கள் பலரும் தன் பின்னால் நிற்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசுகையில், இத்தாலி பிரதமர் பற்றி பேசும்போது, அவரை அழகி என்று குறிப்பிட்டதோடு, அவ்வாறு கூறியது, உங்களை புண்படுத்தியதா என்றும், மெலோனியைப் பார்த்து கேட்டார்.
எங்களுடன் ஒரு பெண் இருக்கிறார், மிக இளமையான பெண் அவர், ஆனால், நான் அவ்வாறு கூற அனுமதியில்லை, காரணம், அவ்வாறு கூறுவதால், அது உங்களுடைய அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றார் டிரம்ப். மேலும், ஒருவேளை, அமெரிக்காவில், ஒருவரைப் பார்த்து இவ்வாறு கூறினால், அது அவர்களுடைய அரசியல் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரவி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. டிரம்ப்பின் பேச்சினால் மெலோனி மகிழ்ச்சி அடையவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த ஒரு சங்கடமான சம்பவம் மட்டுமல்ல, மெலோனிக்கு அடுத்த சங்கடம் துருக்கி அதிபர் ரெசேப் தயிப் எர்டோகனால் நேரிட்டது.
நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், ஆனால், நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நான் சொல்ல விரும்புகிறேன் என்றார் எர்டோகன். அவர் அவ்வாறு சொல்லும்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனும் அங்குதான் இருந்தார். இதைக் கேட்ட மெலோனி, ஆமாம் எனக்குத் தெரியும் என்று பதிலளித்து சமாளித்தார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பான விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் திங்கள்கிழமை முதல் பரவி பேசுபொருளாகியிருக்கிறது.
உலகத் தலைவர்கள் இவ்வாறு ஒரு நாட்டின் தலைவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலா பேசுவது என பலரும் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.