
பாகிஸ்தானில், போலியோ பணியாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல் துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நிசாம்பூரின் காஹி பகுதியில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் பெண் சுகாதாரப் பணியாளர்கள் இன்று (அக். 15) ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களைக் குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல் துறை அதிகாரியான மக்சூத் (வயது 35) கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, போலியோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிய 3 நாள்களில் மட்டும் சுகாதாரப் பணியாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட 2 ஆவது தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கைபரின் ஸ்வாட் மாவட்டத்தில், நேற்று (அக். 14) போலியோ பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
முன்னதாக, பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 53 பேர் படுகாயமடைந்தனர்.
மேலும், சர்வதேச அளவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டுமே தற்போது போலியோ பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த கென்ய முன்னாள் பிரதமர் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.