
மறைந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின், உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட ஆயிரக்கணக்கான மக்களை விரட்ட, காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா (வயது 80), கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (அக். 15) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, தனி விமானம் மூலம் கென்யா கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் திரண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சுமார் 29 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், சுமார் 60,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கால்பந்து மைதானத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் கென்யாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அந்த மைதானத்தில் திரண்டனர். அப்போது, அதிபர் அரங்கில் அத்துமீறி நுழைந்த மக்களை விரட்ட காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது.
இதனால், அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோட முயற்சித்ததால் கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டநெரிசலில் சிக்கி ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
முன்னதாக, கென்யா மக்களால் ‘பாபா’ என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் ஒடிங்காவின் மறைவுக்கு, அதிபர் வில்லியம் ரூட்டோ 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கனடா: நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.