
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியாவுடனான உறவு குறித்தும் மோடியுடனான நட்பு குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவியேற்றுள்ள செர்ஜியோ கோர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து டிரம்ப் பேசியதாவது:
“அவர்களின் சந்திப்பு சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். மோடி சிறந்த மனிதர். அவர் என்னை நேசிப்பதாக செர்ஜியோ தெரிவித்தார். நேசிக்கிறார் என்ற வார்த்தையை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், அவருடைய அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை.
நான் இந்தியாவை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். ஒரு அற்புதமான நாடு. ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்கள் வருவார்கள். சிலர் சில மாதங்களே இருப்பார்கள். ஆனால், எனது நண்பர் மோடி நீண்ட காலமாக பிரதமராக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தான், ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
இணையத்தில் விமர்சனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதில்கள் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
“மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை” என்ற கருத்தை அந்த இடத்தில் கூறவேண்டிய அவசியம் என்ன? எதை மனதில் வைத்துக் கொண்டு டிரம்ப் கூறினார்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தியாவில் ஆண்டுதோறும் புதிய தலைவர்கள் வருகிறார்கள் என்று டிரம்ப் கூறிய கருத்து சரியா? என்ற வாதமும் இணையத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடி, அதற்கு முன்பு 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் என 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நிலையான ஆட்சியே நிலவி வருகின்றது.
பாகிஸ்தானில்தான் இதுவரை ஒருவர்கூட 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தது இல்லை. 1993 ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 5 பிரதமர்கள் பதவியேற்றுள்ளனர்.
இதனடிப்படையில், இந்தியாவை பாகிஸ்தானுடன் அதிபர் டிரம்ப் குழப்பிக் கொண்டதாக இணையத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.