
டாக்கா விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் சனிக்கிழழை பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்கு 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் எல்லைக் காவல்படை ஆகியவற்றின் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் இணைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பாதுகாப்பு கருதி அனைத்து விமானச் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. "அனைத்து விமானங்களும் தரையிறங்குவதும் புறப்படுவதும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எங்கள் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளன" என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, சரக்கு மண்டலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
தீ விபத்து காரணமாக விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் பெரும் பகுதியில் அடர்ந்த புகை சூழ்ந்து காணப்பட்டது. ஐந்து நாள்களுக்குள் வங்க தேசத்தில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய தீ விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.