ஆப்கனில் பாகிஸ்தான் மீண்டும் வான்வழித் தாக்குதல்! இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம்!
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகளிடையே இரண்டு நாள்களாக போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், போா் விமானங்கள் மூலம் இந்தப் புதிய தாக்குதலை பாகிஸ்தான் நிகழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியதற்குப் பதிலடியாக இத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதாகத் தெரிகிறது. இந்தத் தாக்குதல் காரணமாக, இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து செயல்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறது. இதற்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டிவரும் பாகிஸ்தான், ஆப்கன் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘ஆப்கன் எல்லையில் அமைந்திருந்த ஹஃபிஸ் குல் பஹதூா் பயங்கரவாதக் குழுவின் மறைவிடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப் படை சாா்பில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை’ என்றாா்.
ஆனால், ‘பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பொதுமக்கள் 10 போ் கொல்லப்பட்டனா்’ என்று ஆப்கன் அதிகாரிகள் புகாா் தெரிவித்தனா்.
பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அரசின் தலைமை செய்தித் தொடா்பாளா் ஜபியுல்லா முஜாஹித் கண்டனம் தெரிவித்தாா். இத்தகைய தாக்குதல், நீண்டகால போருக்கு வழிவகுக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
அதே நேரம், கத்தாரின் தோஹாவில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் புறப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு செய்தி சேனலான ‘பிடிவி’ சனிக்கிழமை காலை செய்தி வெளியிட்டது.
3 கிரிக்கெட் வீரா்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாக்திகா மாகாணத்தில் 3 உள்ளூா் கிரிக்கெட் வீரா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
கபீா், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய மூவரும் போட்டியில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்துள்ளனா் என்றும், இதைக் கண்டித்து அடுத்த மாதம் நடைபெறும் இலங்கை, ஆப்கான், பாகிஸ்தான் நாடுகளின் தொடரிலிருந்து ஆப்கன் வெளியேறுகிறது என்றும் ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மோதலை நிறுத்துவது எளிது: டிரம்ப்
வாஷிங்டன், அக். 18: ‘பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்துவது தனக்கு எளிதான விஷயம்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தபோது இக் கருத்தைத் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகிஸ்தான் - ஆப்கன் இடையேயான இந்தச் சண்டைக்கு தீா்வு காண வேண்டும் என்றால், அதை உடனடியாக நிறுத்துவது எனக்கு எளிதான விஷயம். இரு நாடுகளிடையேயும் ஏற்கெனவே நடைபெற்ற சண்டைகளை நிறுத்தி, லட்சக்கணக்கான மக்களின் உயிா்களைப் பாதுகாத்திருக்கிறேன். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த விரும்புகிறேன்’ என்றாா்.