பாக். - ஆப்கன் மோதலுக்கு முடிவு: சண்டை நிறுத்தம் உடனடியாக அமல்!
படம் | கத்தார் வெளியுறவு விவகார அமைச்சகம்

பாக். - ஆப்கன் மோதலுக்கு முடிவு: சண்டை நிறுத்தம் உடனடியாக அமல்!

சண்டை நிறுத்தம் - பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய இருதரப்பும் சம்மதம்!
Published on

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்கு முடிவுற்று சண்டை நிறுத்தம் உடனடியாக அமலாவதாக மத்தியஸ்தம் செய்யும் கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து செயல்படும் ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ (டிடிபி) என்ற பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நிகழ்த்தி வருகிறது. இதற்கு ஆப்கானிஸ்தானை குற்றஞ்சாட்டிவரும் பாகிஸ்தான், ஆப்கன் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களக இவ்விரு நாடுகளுக்கும் மோதல் தீவிரமான நிலையில், இருதரப்பிலும் உயிரிழப்பும் அதிகரித்தது. இதனையடுத்து, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க கத்தாரும் துருக்கியும் தோஹாவில் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன் பயனாக உடனடியாக சண்டை நிறுத்தம் செய்யும் உடன்படிக்கைக்கு சனிக்கிழமை(அக். 18) இரவில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட 48 மணி நேர சண்டை நிறுத்த ஒப்பந்தம் முடிவுற்ற பின், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் அந்நாட்டின் வளிரளம் கிரிக்கெட் வீரர்களான கபீர் அகா, சிப்காதுல்லாஜ், ஹரூன் ஆகியோர் கொல்லப்பட்டனர். சர்வதேச அளவில் கண்டனத்தை ஈர்த்துள்ள இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதைக் கண்டித்து அடுத்த மாதம் நடைபெறும் இலங்கை, ஆப்கான், பாகிஸ்தான் நாடுகளின் தொடரிலிருந்து ஆப்கன் வெளியேறுகிறது என்றும் ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரங்கலும் தெரிவித்திருக்கிறது.

Summary

Pakistan, Afghanistan agree to 'immediate ceasefire' says Qatar: This truce comes after the two nations traded fresh strikes and attacks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com