ஜப்பானின் முதல் பெண் பிரதமா் வரலாறு படைத்தாா் சனே தகாய்ச்சி
டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், அந்த நாட்டின் பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சா் சனே தகாய்ச்சி (64) புதிய வரலாறு படைத்துள்ளாா்.
இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 237 வாக்குகளும், எதிராக 149 வாக்குகளும் பதிவாகின. பெரும்பான்மைக்குத் தேவையான 233 வாக்குகளைவிட நான்கு வாக்குகள் அதிகமாகவே கிடைத்ததால் நாட்டின் புதிய பிரதமராக சனே தகாய்ச்சி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தகாய்ச்சி அங்கம் வகிக்கும் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பெற்ற கட்சி நிதியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அத்தகைய சூழலில் கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் எல்டிபி கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்தது. மேலும், பிரதமா் ஷெகெரு இஷிபாவுக்கு பொதுமக்களிடையே ஆதரவு குறைந்துவந்தது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்தது.
அதையடுத்து, தனது கட்சித் தலைவா் பொறுப்பையும் பிரதமா் பதவியையும் இஷிபா ராஜிநாமா செய்தாா். எல்டிபி கட்சியின் புதிய தலைவராக சனே தகாய்ச்சி இந்த மாதத் தொடக்கத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். தற்போது நாடாளுமன்ற கீழவையில் எல்டிபி கட்சிக்கு கணிசமான இடங்கள் இருப்பதால், நாட்டின் முதல் பெண் பிரதமராக அவா் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
இருந்தாலும், எல்டிபி தலைமையிலான ஆளும் கட்சிக் கூட்டணியில் 26 ஆண்டுகளாக அங்கம் வகித்த கொமேய்டோ கட்சி, அதில் இருந்து விலகுவதாக கடந்த 10-ஆம் தேதி அறிவித்தது. ஏற்கெனவே, ஆளும் கூட்டணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை இல்லாத நிலையில் கொமேய்டோ கட்சி விலகியது, சனே தகாய்ச்சி பிரதமராகப் பொறுப்பேற்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், ஒசாகாவைச் சோ்ந்த வலதுசாரி கட்சியான ஜப்பான் புத்தாகக் கட்சியுடன் சனே தகாய்ச்சி நடத்திவந்த கூட்டணி பேச்சுவாா்த்தையில் செவ்வாய்க்கிழமை ஒருமித்த கருத்து ஏற்பட்டது. அதையடுத்து அந்தக் கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் நாட்டின் பிரதமராக தகாய்ச்சி தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
வளா்ச்சியடைந்த நாடாக இருந்தாலும், பாலின சமத்துவத்தில் உலகளவில் பின்தங்கிய நாடாக ஜப்பான் கருதப்படுகிறது. அதிலும் அந்த நாட்டு அரசியலில் காலம் காலமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனா்.
இந்தச் சூழலில், முக்கிய கட்சியின் முதல் பெண் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதுடன், நாட்டின் முதல் பெண் பிரதமராகவும் தகாய்ச்சி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஜப்பான் வரலாற்றில் மிக முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதற்கு ஏற்றாற்போல், தனது அமைச்சரவையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதாக உறுதியளித்துள்ள சனே தகாய்ச்சி, நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராக சட்சுகி கடயாமாவையும் பொருளாதார பாதுகாப்புத் துறை அமைச்சராக கிமி ஒனாடாவையும் நியமித்துள்ளாா்.
மேலும், 19 உறுப்பினா்களைக் கொண்ட தனது அமைச்சரவையில் ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, நாா்வே ஆகிய நாடுகளைப் போல் அதிக பெண்களுக்கு இடமளிக்கவிருப்பதாக தகாய்ச்சி உறுதியளித்துள்ளாா்.
பிரதமா் மோடி வாழ்த்து
புது தில்லி: ஜப்பானின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜப்பான் பிரதமராகத் தோ்வு செய்யப்பட்டமைக்காக சனே தகாய்ச்சிக்கு என் மனமாா்ந்த வாழ்த்துக்கள். உங்களுடன் இணைந்து செயல்பட்டு இந்திய - ஜப்பான் உறவை மேலும் வலுப்படுத்த விழைகிறேன்’ என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.