
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருந்தினர்களுக்கு தன்னுடைய தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
முதலில் தீபாவளி பண்டிகை என்பதையே அவர் உச்சரிக்கத் திணறினார். பிறகு ஒருவாறு சரியாக தீபாவளி என்று உச்சரித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
பல காலமாக, டொனால்ட் டிரம்புக்கு இந்திய வம்சாவளியினர் பெயர்களை உச்சரிப்பதில் சற்று சிரமம் இருக்கிறது. அதுவே நேற்றும் தொடர்ந்தது.
வெள்ளை மாளிகையில், தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கூடுதல் அட்டார்னி ஜெனரல் ஹர்மீத் தில்லோன் பெயரை சரியாக அழைத்த டிரம்ப், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் க்வத்ராவின் பெயரை, வினய் க்வட்ரூத் என்று தவறாக உச்சரித்தார்.
இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில், இந்திய தூதர் வினய் க்வட்ருத் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி. மிகவும் நன்றி என்று டிரம்ப் கூறினார்.
அடுத்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பெயரை சரியாக உச்சரித்ததுடன், இவரது பெயர் நன்றாகஇருக்கிறது, மிகவும் எளிதாகவும் இருக்கிறது செர்ஜியோ கோர் என்று கூறினார். மேலும், அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளையும் டிரம்ப் தெரிவித்துக் கொண்டார்.
அடோப் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயெண் பெயரை, சாந்தா னு நாராயண் என்று தவறாகவே உச்சரித்தார்.
மேலும், மைக்ரான் டெக்னாலஜி தலைமை செயல் அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா பெயரை, சஞ்சய் மரோட்டா என்று அழைத்தார். சஞ்சய் மரோட்டா, உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்று கூறினார் டிரம்ப்.
டொனால்ட் டிரம்ப், ஏற்கனவே பல முறை இந்திய வம்சாவளியினர் பெயர்களை தவறாக உச்சரித்திருக்கிறார் என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வந்த டிரம்ப், அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் முன்னிலையில், பிரதமர் மோடி சாய்வாலாவாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் என்று கூறுவதற்கு பதிலாக சீ வாலா என்று கூறினார். இதனால், அரங்கத்தில் மிக மோசமான சிரிப்பொலி எழுந்தது. சச்சின் டெண்டுல்கரை சுச்சின் டெண்டுல்சர் என்றும் தவறாக உச்சரித்திருந்தார்.
சுவாமி விவேகானந்தர் பெயரைக் கூட, ஒரு முறை விவே.... கமுன்... னந்த் என்று உச்சரித்து, பெயரை முழுமையாக முடிக்காமல் சிரித்து மழுப்பியிருந்தார்.
அவரிடம், உச்சரிப்பு தவறாக இருக்கிறது என்று யார் சொன்னாலும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார். இல்லை நான் சரியாகவே உச்சரிக்கிறேன் என்று சொல்லிவிடுவார் என்கின்றன தகவல்கள்.
இதையும் படிக்க.. வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு! ஏமாற்றப்பட்டவர் சொல்வது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.