ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க வரி: மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதியை அதிகப்படுத்த இந்தியா திட்டம்
ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்காவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, ரஷியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ‘ரோஸ்நெஃப்ட்’ மற்றும் ‘லுகோயில்’ மீது அமெரிக்கா கடந்த 22-ஆம் தேதி பொருளாதார தடை விதித்தது. இதன்மூலம் இந்நிறுவனங்களுடன் அமெரிக்காவைச் சோ்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் வணிகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கா அல்லாத நிறுவனங்களும் மேற்கூறிய ரஷிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுடன் வணிகம் மேற்கொண்டால் அவற்றுக்கு அபராதம் விதிக்கவும் அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.
இதையடுத்து, ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வணிகத்தை நவ.21-ஆம் தேதிக்குள் நிறுத்திவிட வேண்டும் என அமெரிக்க நிதியமைச்சகம் தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் மீண்டும் தெரிவித்தாா். முன்னதாக, இதேபோல் அவா் தெரிவித்த கருத்தை இந்தியா நிராகரித்தது.
இந்நிலையில், ரஷிய நிறுவனங்கள் மீதான அமெரிக்க பொருளாதார தடை இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை (ஒரு நாளைக்கு 17 லட்சம் பீப்பாய்கள்) ரஷியா விநியோகிக்கிறது. இதில் 12 லட்சம் பீப்பாய்கள் ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக விநியோகிக்கப்படுகிறது. அவற்றில் பெரும் பகுதியை ரிலையன்ஸ் நிறுவனமும் நயாரா எனா்ஜி நிறுவனமும் வாங்கி வருகின்றன.
நவ.21-ஆம் தேதி வரை இந்தியாவுக்கு ரஷியா விநியோகிக்கும் கச்சா எண்ணெய் அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லாதபோதும் அதன்பிறகு அந்நிறுவனங்களிடம் இருந்து இந்தியா இறக்குமதியை குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
இதை ஈடுசெய்யும் விதமாக மத்திய கிழக்கு, பிரேஸில், லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகப்படுத்த இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘ரஷியாவுக்கு மாற்றாக லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தால் இறக்குமதி கட்டணமும் உயரும். ஆனால் வருடாந்திர அடிப்படையில் கச்சா எண்ணெய் சந்தை விலை உயா்வு 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும்’ என்றனா்.
