

ஒரு பக்கம் வங்கக் கடலில் உருவாகி ஆந்திரம் நோக்கி வந்து கொண்டிருக்கும் மொந்தா புயலைப் பற்றிய செய்திகள் விறுவிறுப்படைந்து வரும் நிலையில், ஜமைக்கா அருகே உருவாகியிருக்கும் மெலிஸா புயல் பற்றிய தகவல்கள் திகிலூட்டும் வகையில் உள்ளன.
புயல்கள் குறித்து ஆராய்ந்து எச்சரிக்கும் தொழில்நுட்பங்கள் உருவான பிறகு, அதாவது கிட்டத்தட்ட 174 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு புயல் உருவானதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மெலிஸா புயல் உருவாகியிருப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமெரிக்க பகுதியில் கடலில் வேகமாக நகர்ந்து வரும் மெலிஸா புயல், கடலில் சுழன்றுகொண்டே கொண்டே நகரும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த புயலின் கண் என்று அழைக்கப்படும் மையப் பகுதியை வைத்து, இது மிகக் கடுமையான அதாவது 5ஆம் நிலை தீவிரத் தன்மை கொண்ட புயலாக உருவாகியிருப்பதாகவும், கரீபிய கடலில் இவ்வளவு வலிமையான புயல் ஒன்று இதுவரை உருவானதேயில்லை என்றும் வானிலை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
மேலும், இந்த புயல் ஜமைக்காவில் கரையைக் கடக்கும் என்ற நிலையில், இந்தப் புயலை தாங்கும் சக்தி கொண்ட கட்டங்கள், கட்டமைப்புகள் ஜமைக்காவில் இல்லை என்று அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் தெரிவித்துள்ளார்.
இந்த புயல், அந்நாட்டு நேரப்படி செவ்வாயன்று கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு சுமார் 281 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மெலிஸா காரணமாக அதிகனமழை, வெள்ளம், நிலச்சரிவு, புயல் மற்றும் கடல் அலைகள் 13 அடிகள் வரை எழுவது உள்ளிட்டவை நேரிடும் என்றும் அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த சூறாவளியை எதிர்கொள்ளும் கட்டமைப்புகள் இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கிருக்கும் நிவாரண முகாம்கள் பாதுகாப்பில்லாதவை. ஆனாலும் மக்கள் வேறு எங்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எங்களால் நகரக் கூட முடியவில்லை என்றும் மக்கள் கூறுவது பதிவாகியிருக்கிறது.
இதுவரை கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து சுமார் 6 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி புயல் காரணமாக பெய்யும் கனமழையால்தான் அதிக உயிரிழப்புகள் நேரிடும் என்றும், காற்றை விட கனமழை அதிகமாக இருக்கும் என்பதால், ஒட்டுமொத்த ஜமைக்காவும் அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. தில்லியை உலுக்கிய கொலை: தடயமே இல்லாமல் கொன்றாரா தடய அறிவியல் மாணவி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.