ஐக்கிய அரபு அமீரக லாட்டரி: ரூ.240 கோடி ஜாக்பாட் வென்ற இந்திய இளைஞர்!!

ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ.240 கோடி ஜாக்பாட் வென்றார் இந்திய இளைஞர்
அனில்குமார்
அனில்குமார்
Published on
Updated on
2 min read

ஐக்கிய அரபு அமீரகத்தின் லாட்டரியை வாங்கி அதில் ரூ.240 கோடி ஜாக்பாட் வென்றுள்ளார் அனில்குமார் பொல்லா என்ற இந்தியாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர்.

இந்திய ஏற்றுமதியாளராகவும், அபிதாபியில் பல காலமாக வாழ்ந்து வருபவருமான அனில்குமார், அந்நாட்டின் புதிய கோடீஸ்வரராக உருவாகியுள்ளார்.

23வது அதிர்ஷ்ட நாள் குலுக்களில் இவர் இந்த ஜாக்பாட்டை வென்றுள்ளார். இந்த பரிசுத் தொகையை இவர் யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை. காரணம், அனைத்து ஏழு வெற்றி எண்களும் இவரது லாட்டரியுடன் பொருந்தியிருக்கிறது. இதில் பங்கேற்ற 88 லட்சம் பேரில் இவர் தனி ஒருவராக மாறியிருக்கிறார்.

தான் வீட்டில் ஓய்வாக இருந்தபோது, ஐக்கிய அரபு அமீரக லாட்டரி குழுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த லாட்டரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இதில் பங்கேற்று வருகிறேன், நிச்சயம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது என்கிறார் அனில்குமார்.

லாட்டரி வெல்வது என்பது என்னுடைய நீண்டநாள் கனவு. எனக்கு அழைப்பு வந்த போது, முதலில் என்னால் அதனை நம்ப முடியவில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்று சொன்னேன். அது எனக்குப் புரிய வெகு நேரம் ஆனது, இப்போது வரை அது உண்மைதானா என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று அனில்குமார் கூறியிருக்கிறார்.

பரிசுத் தொகை எவ்வாறு செலவிடப் போகிறீர்கள் என்று ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

முதலில், இந்தத் தொகையை எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சரியான வழியில் செலவிட வேண்டும். பரிசு கிடைத்த பிறகு, என்னிடம் பணம் இருக்கிறது என்று தோன்றியது. சரியான வழியில் சென்று நிச்சயம் பெரிதாக எதையாவது செய்ய வேண்டும்.

சூப்பர் கார் ஒன்றை வாங்க வேண்டும், மிகப்பெரிய நட்சத்திர விடுதியில் இதனைக் கொண்டாட வேண்டும். என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் இங்கே அழைத்து வந்து என்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

என்னுடைய தாய், தந்தைக்கு மிகப்பெரிய கனவுகள் இல்லை. இருக்கும் சிறு சிறு கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

இவருடன், மேலும் 10 பேர் தலா ரூ.24 லட்சத்தை வென்று லட்சாதிபதிகளாகியிருக்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரக லாட்டரி உருவாக்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 200 பேர் தலா ரூ.24 லட்சத்தை வென்றுள்ளனர். இந்த தொகையாக இதுவரை கிட்டத்தட்ட ரூ.343 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு வரி விதிக்கப்படும்?

ஐக்கிய அரபு அமீரகத்தில், லாட்டரி மூலம் வரும் வருமானத்துக்கு வரி கிடையாது. எனவே முழு தொகையையும் அனில் குமார் எடுத்துச் செல்வார்.

இதுவே இந்தியாவில் என்றால் லாட்டரி தொகைக்கு 30 சதவீதம் பொது வரி மற்றும் 15 சதவீதம் துணை வரி மற்றும் 4 சதவீதம் சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரி விதிக்கப்படும்.

அதன்படி, யாராவது இந்தியாவில் ரூ.240 கோடியை வென்றால், அவர்கள் 86 கோடியை வரியாக செலுத்த வேண்டியது வரும். அவர்கள் கையில் ரூ.156 கோடி கிடைக்கும்.

Summary

Indian youth wins Rs 240 crore jackpot in UAE lottery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com