
ஆப்கானிஸ்தானில் நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவ வெளிநாடுகள் முன்வர வேண்டும் என்று தலிபான் அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800 பேர் பலியாகினர். 2,500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து போயிருக்கிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளிலிருந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஹெலிகாப்டர்கள் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பல கிராமங்கள், மலைப் பகுதியில் அமைந்திருப்பதால், மீட்புப் படையினரை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் கட்டட இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்கள் மிகவும் பிற்போக்குத்தனத்தை பின்பற்றும் சமுதாய மக்களைக் கொண்டது என்பதால், அங்குள்ள கலாசார தடைகளால் பெண்களும் சிறுமிகளும் மருத்துவமனைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் பேர் இருப்பார்கள் என்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் காயத்துடன் மருத்துவமனைக்கு வரும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பல மருத்துவமனைகள் திணறி வருகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தரப்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பல உலக நாடுகளிலிருந்தும் நிவாரண பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன.
குனாா் மற்றும் நாங்கா்ஹாா் மாகாணங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையாக உள்ளது. நாங்கா்ஹாா் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரின் கிழக்கு-வடகிழக்கே 27 கி.மீ. தொலைவில், பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிக்டா் அளவுகோலில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் குனாா் மாகாணத்தில் 610 போ் உயிரிழந்தனா். 1,300 போ் காயமடைந்தனா். பல வீடுகள் சிதைந்தன. நாங்கா்ஹாா் மாகாணத்திலும் ஏராளமானோா் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.
இதையும் படிக்க... மனித நுரையீரலில் வளர்ந்த பட்டாணிச் செடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.