
காத்மாண்டுவை உலுக்கிய இளைஞர்களின் போராட்டத்தின் எதிரொலியாக விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனா். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.
நாடு முழுவதும் நிலவிவரும் பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்துக்கு பிரதமர் கே.பி.சர்மா ஓலி தலைமையிலான அரசு உத்தரவிட்டது.
நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது.
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், இளைஞர்களின் போராட்டத்தின் எதிரொலியாக விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரியும் இன்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ராம்நாத் அதிகாரியின் ராஜிநாமா கடிதத்தில், "மக்கள் ஜனநாயகத்தை கேள்வி கேட்கும் இயல்பான உரிமையை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, பரவலான அடக்குமுறைகள், கொலைகள் மற்றும் கட்டாயத்தைப் பயன்படுத்தி, நாட்டை ஜனநாயகத்திற்கு பதிலாக அதிகாரமையமாக மாற்றியது" என்று அரசுக்கு எதிராகப் பதிவிட்டுள்ளார்.
இளைஞர்களின் போராட்டம் நடத்திய 24 மணி நேரத்துக்குள் இரண்டு அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.