
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடையவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்னும் துப்பு துலங்கவில்லை.
சம்பவ இடத்தில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்களுக்கு இந்தக் குற்றச் செயலில் தொடர்பில்லை என்று விடுவித்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டு பல மணி நேரங்களுக்குப் பிறகும், கொலையாளி பற்றிய விவரங்கள் மர்மமாகவே இருக்கிறது. இவர் பல்கலையின் ஒரு கட்டடத்துக்குள் பதுங்கியிருந்து துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இன்னும் குற்றவாளியைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று உடா காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உடா மாகாண பல்கலையில் செப்.10ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, சார்லி கிர்க்கை அடையாளம் தெரியாத நபர் சுட்டுக் கொன்றார். இன்னும் அவர் அந்த பல்கலை வளாகத்திலேயே இருப்பாரா என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், சார்லி கிர்க்கை, கட்டடத்தின் மறைவானப் பகுதியிலிருந்து சுட்டிருக்கலாம் என்று கூறப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க், நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்க முனைந்தார். அப்போது ஒரே ஒரு துப்பாக்கித் தோட்டா சுடும் சப்தம் கேட்கிறது. அவ்வளவுதான், சார்லி சுருண்டு விழுகிறார். அந்த இடமே அமளியாகிறது. இவைதான் சம்பவத்தின்போது பதிவான விடியோவில் தெரிய வந்துள்ளது.
கிர்க்கின் கழுத்திலிருந்து ரத்தம் கொட்டுகிறது. அவர் தன்னுடைய மைக்ரோஃபோனை அழுத்திப் பிடித்தபடி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த விடியோவின் அடிப்படையில் துப்பாக்கி எங்கிருந்து சுடப்பட்டுள்ளது என்றும், மிகத் துல்லியமாக அவர் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் அனுபவம் வாய்ந்த கொலையாளிகள்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர், முழுக்க கருப்பு நிற உடையணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் நடந்த குற்றச் சம்பவங்களில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவிய ஆதாரங்களை அடிப்படையாக வைத்து இந்த சம்பவத்தில் கொலையாளியைக் கண்டுபிடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.
அதாவது, கொலையான சார்லி கிர்க் இருந்த இடத்திலிருந்து, சுட்டவர் இருந்த இடம் மற்றும் அவர் சரியாக, கிர்க்கை சுடுவதற்கு ஏற்ற இடத்தை எவ்வாறு அடைந்தார் என்பது பற்றி சம்பவ இடத்தில் துல்லிய விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.