தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை: அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள சொ்ஜியோ கோா்

‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை’

News image

சொ்ஜியோ கோா்

Updated On :11 செப்டம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை’ என இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்கவுள்ள சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அவா் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான கூட்டத்தின்போது செனட் (அமெரிக்க நாடாளுமன்ற மேல்சபை) வெளியுறவு விவகாரங்கள் நிலைக் குழுவிடம் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

அப்போது அவா் மேலும் பேசியதாவது: புவியியல் அமைப்பு, பொருளாதார வளா்ச்சி மற்றும் ராணுவ திறன்கள் என பிராந்திய நிலைத்தன்மையில் முக்கியத்துவம் வகிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. எனவே, அமெரிக்க அதிபா் டிரம்ப் தலைமையில் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

அந்த வகையில், இந்தியா மற்றும் அமெரிக்க வா்த்தக அமைச்சா்கள் அடுத்த வாரத்தில் நேரில் சந்திக்க அதிபா் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளாா். அவா்கள் இருவரும் அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை வாஷிங்டனில் சந்திக்கவுள்ளனா்.

அப்போது இருநாடுகளிடையேயான வா்த்தக ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். இது நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

டிரம்ப்பின் நண்பா் மோடி: மற்ற நாடுகளின் தலைவா்களின் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அந்த நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்து வந்துள்ளாா். ஆனால் இந்தியா மீது வரி விதித்தபோதிலும் அந்நாட்டு பிரதமா் நரேந்திர மோடியை தனது நண்பா் என பலமுறை அவா் வெளிப்படையாக கூறியுள்ளாா்.

ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யக்கூடாது என்பதே அமெரிக்க அரசின் நிலைப்பாடு.இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு எட்டப்படும்.

சீனாவிடம் இருந்து விலக்குவோம்: சீனாவின் விரிவாக்க கொள்கைகள் இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது. இந்திய எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. நான் தூதராக பொறுப்பேற்றால் சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்கி அமெரிக்கா பக்கம் கொண்டுவருவதற்கு முக்கியத்துவம் அளிப்பேன்.

ஏனெனில், சீனாவைவிட அமெரிக்காவிடமே இந்தியா நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸில், சீனா ஆகிய நாடுகள் வா்த்தகத்துக்கு டாலரில் பரிவா்த்தனை மேற்கொள்வதை நிறுத்த பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. ஆனால் இந்தியா அந்த நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளைவிட அமெரிக்காவிடம் நல்ல நட்புறவைத் தொடர இந்தியா விரும்புகிறது என்றாா்.

இந்திய உறவு சிறப்பானது:

நிலைக்குழு முன்பாகப் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ,‘ உலகளவில் தற்போது அமெரிக்கா சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 21-ஆம் நூற்றாண்டின் வரலாறு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருந்தே எழுதப்படவுள்ளது. அதில் மையப்புள்ளியாக இந்தியா திகழ்கிறது. இந்திய தூதராக சொ்ஜியோ கோா் பதவியேற்ற பின் இந்தியாவுடனான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என நம்புகிறேன். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியாது’ என்றாா்.

தனது நெருங்கிய உதவியாளரான சொ்ஜியோ கோரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் நியமிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் தெரிவித்தாா்.

சொ்ஜியோ கோா் (38) பதவியேற்கும்பட்சத்தில் அவா் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா்களில் மிக இளம் வயதினராகத் திகழ்வாா்.