
பிரிட்டன் நாட்டுக்கு, அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறியதாக, இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு நேற்று (செப்.17) சென்றடைந்தார். அப்போது, அவருக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உற்சாக வரவேற்பு அளித்தார்.
அரச விவகாரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதியில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோரை மன்னர் மூன்றாம் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், வின்சோர் கோட்டைப் பகுதியில் ராஜ ஊர்வலம் முடிவடைந்த பின்னர், அரசு அணிவகுப்பை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, மன்னர் சார்லஸை கடந்து சில அடிகள் முன்னதாக அதிபர் டிரம்ப் நடந்து செல்லும் விடியோ இணையத்தில் வெளியானது.
பிரிட்டன் மன்னருக்கு முன் அவரது விருந்தினர் ஒருவர் நடந்து செல்வது, அந்நாட்டு அரச நெறிமுறைகளை மீறும் செயல் எனக் கூறப்படும் நிலையில், டிரம்ப் அவ்வாறு நடந்து சென்றது அவமரியாதையான ஒன்று என இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அணிவகுப்பை பார்வையிட செல்லும் மன்னர் சார்லஸ், டிரம்ப்பை முன்னால் செல்ல செய்கை செய்வதுபோன்ற விடியோவும் வெளியாகியுள்ளது. இதுபோன்ற, அணிவகுப்புகளை விருந்தினராக வந்திருக்கும் மற்ற நாட்டு தலைவர்கள் முன்னால் சென்று பார்வையிடுவது மரியாதை நிமித்தமான வழக்கம் எனக் கூறப்படுகிறது.
இத்துடன், பிரிட்டனின் பட்டத்து இளவரசர் வில்லியம் உடனான சந்திப்பின்போது அவருடன் கைகுலுக்கிய அதிபர் டிரம்ப், மற்றொரு கையால் இளவரசரின் தோளில் தட்டியதாகவும் இதுவும் அரச நெறிமுறை மீறல் என பரவலாகப் பேசப்படுகிறது.
முன்னதாக, தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்துக்கும் அதிபர் டிரம்ப்தான் பிரதிநிதி எனக் குறிப்பிட்டு, அவரது வருகைக்கு எதிராக பிரிட்டனில் 50-க்கும் மேற்பட்ட பிரசாரக் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.