ஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: ஆப்கன் எல்லைக்கு இடம்பெயா்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி கைபா் பக்துன்கவா மாகாணத்துக்கு தங்கள் முகாம்களை மாற்றியுள்ளனா்.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை முன்னின்று நடத்துவதில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு முக்கியத் தொடா்பு உள்ளது.
இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிமிரமிப்பு காஷ்மீரை மையமாகக் கொண்டுதான் இந்தப் பயங்கரவாத அமைப்புகள் இத்தனை ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தன. இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் ஊடுருவுவதற்கும், தாக்குதல் நடத்துவதற்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீா் ஏற்ற இடமாக பயங்கரவாதிகளுக்கு அமைந்தது.
ஆனால், அண்மையில் இந்திய விமானப் படை நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குண்டுவீசி தகா்க்கப்பட்டன. இதில் பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பலா் உயிரிழந்தனா். இந்தியாவில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மீண்டும் ஆபரேஷன் சிந்தூா் தொடங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தங்கள் முகாம்களை ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய கைபா் பக்துன்கவா பிராந்தியத்துக்கு மாற்றியுள்ளனா்.
பஹாவல்பூா், முா்திக், முஷாஃபராபாத் உள்ளிட்ட இடங்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீா் எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் இந்திய விமானப் படைகள் சில மணி நேரத்திலேயே அங்குள்ள கட்டடங்களைத் தரைமட்டமாக்கிவிட்டன.
மேலும், பயங்கரவாதிகளின் செயல்பாடுகளையும் இந்தியா எளிதாக கண்காணித்து விடுகிறது. இதைத் தவிா்க்க இந்திய எல்லையில் இருந்து பல நூறு கி.மீ. அப்பால் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு தங்கள் முகாம்களை பயங்கரவாத அமைப்புகள் மாற்றி வருகின்றன.
கைபா் பக்துன்கவா மாகாணத்தின் மன்சிகாா் மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினா் தங்கள் இயக்கத்துக்கு ஆள்சோ்க்கும் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பயங்கரவாத பிரசாரம் ஜெய்ஷ் அமைப்பின் முக்கியத் தலைவா் மௌலானா முஃப்தி மசூத் என்ற இலியாஸ் காஷ்மீரி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இலியாஸ் காஷ்மீரி, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மௌலானா மசூத் அஸாருக்கு நெருக்கமானவா் ஆவாா். இந்தப் பயங்கரவாதிகளை இந்திய உளவு அமைப்புகள் தொடா்ந்து கண்காணித்து வருவதால் பாகிஸ்தான் ராணுவமும், காவல் துறையும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.