
அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத் துறை தொடர்பான தகவல்களை முன் அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம் என உறுதியளிக்குமாறு ஊடகவியலாளர்களை பென்டகன் வலியுறுத்தியிருக்கிறது.
வெளியிடுவதற்கு அனுமதி பெறாத தகவல்களையும் - வகைப்படுத்தப்படாத தகவல்களையும் செய்தியாக வெளியிடுவதைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழியில் ராணுவத் தலைமையகத்தில் உள்ள செய்தி சேகரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கையெழுத்திட வேண்டும் என்று பென்டகன் கூறியிருக்கிறது.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றாத பத்திரிகையாளர்கள் பென்டகனுக்குள் நுழைவதற்கான அனுமதியை, அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களும் இழக்க நேரிடும் என்று வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கான சுற்றறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒரு தகவல் குறித்து செய்தி வெளியிடப்படுவதற்கு முன்பு, அது வகைப்படுத்தப்படாவிட்டாலும் கூட, அத்துறை தொடர்பான உரிய அதிகாரியால் பொது வெளியீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முன் அனுமதி இல்லாமல் செய்திகளை வெளிப்படுத்தக் கூடாது என்பது, சுதந்திரமான பத்திரிகைத் துறை மீது நடத்தப்படும் தாக்குதல் என்று பத்திரிகை சுதந்திரங்களுக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கண்டித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள், வழக்குகள் மற்றும் அரசு மீதான அழுத்தங்கள் காரணமாக பென்டகன் இந்த கட்டுப்பாடுகளைப் பிறப்பிக்கக் காரணமாகிறது என்றும் கூறப்படுகிறது.
நமது ராணுவத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட, முதலில் நம் அரசால் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றால், நாட்டு மக்கள், இனி பத்திரிகையாளர்களால் சேகரிக்கப்படும் செய்திகளை பெற முடியாது. அரசு அதிகாரிகள், மக்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை மட்டுமே மக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்று தேசிய பத்திரிகையாளர் மன்றத் தலைவர் மைக் பால்சாமோ கூறுகிறார். அசோசியேட்டட் பிரஸ்ஸின் தேசிய சட்ட நடைமுறை ஆசிரியர்களில் இவரும் ஒருவர். இது ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் எச்சரிக்கை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட் ஹெக்ஸெத், தன்னுடைய எக்ஸ் பக்க்ததில் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்கள் பென்டகனை இயக்குவதில்லை - மக்களே இயக்குகிறார்கள். பத்திரிகைகள் இனி ஒரு பாதுகாப்பான அரங்குகளுக்குள் சுற்றித் திரிய அனுமதிக்கப்படாது. பேட்ஜ் அணிந்து விதிகளை முறையாகப் பின்பற்றுங்கள். அல்லது வீட்டுக்குச் செல்லுங்கள் என்று பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், பென்டகன் பல செய்தி நிறுவனங்களை தனது வளாகத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறது. மேலும், உரிய பாதுகாப்பு இல்லாமல் வளாகத்தின் மற்ற பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவதைத் தடை செய்வது உள்ளிட்ட தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுப்பாடுகளுக்கு, அமெரிக்க பத்திரிகையாளர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்து, இது ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில், ஊடகங்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகளின் வெளிப்பாடு என்றும், இது ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் விமர்சித்துள்ளது.
இவர்தான் அவர்!
ஹெக்செத்தின் பதவிக்காலத்தில்தான், ஏமனில் வரவிருக்கும் ராணுவத் தாக்குதல்களுக்கான திட்டங்களைப் பற்றிய பாதுகாப்புச் செயலாளர் விவாதித்த சிக்னல் செயலியின் குழுவுக்குள் அட்லாண்டிக் பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க், தற்செயலாக சேர்க்கப்பட்டு, அந்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானது. இதனால் பென்டகனுக்கு தலைக்குனிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், சீனாவுடன் போர் வெடித்தால், அமெரிக்க ராணுவத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எலான் மஸ்க் விளக்கமளிக்க இருப்பதாக நியூயார்க் டைம்ஸுக்கு தகவல் கசிந்து, அது பாதுகாப்புத் துறைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. பிறகு, எலான் மஸ்க்கின் விளக்கவுரை நிகழ்வும் நடக்கவில்லை. இது தொடர்பான விசாரணையில் இரண்டு பென்டகன் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இதையும் படிக்க... பாகிஸ்தான் எங்களுக்கு இணையான போட்டியாளர் அல்ல! சூர்யகுமார் யாதவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.