
பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க கோரி நீண்ட காலமாக இஸ்ரேல் அரசுடன் மோதல் போக்கு நிலவி வருகின்றது. இதனிடையே, பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது.
தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65,000-யைக் கடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காஸாவில் இருந்து லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றிய இஸ்ரேல் ராணுவம், தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நீடித்து நிலைக்க இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தற்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் வழங்கப்படும்.
அக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுள், பயங்கரவாதத்துக்கு பரிசை வழங்குகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அது நடக்கப் போவதில்லை. ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது.
பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் அழுத்தத்துக்கு மத்தியில், பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்து வருகிறேன்.
இதனை நாங்கள் உறுதியுடன் செய்து வருகின்றோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூத குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.