அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவுடன் வா்த்தகம் செய்கின்றன: டிரம்ப்புக்கு சீனா பதிலடி
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகம் செய்து வருகின்றன என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘உக்ரைனுக்கு எதிராக போரை நடத்த சீனாவும், இந்தியாவும் ரஷியாவுக்கு நிதியுதவி அளிக்கின்றன. ரஷியாவிடம் இருந்து பெருமளவில் இரு நாடுகளும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் கிடைக்கும் நிதியில்தான் ரஷியா போரை நடத்துகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
இந்நிலையில் பெய்ஜிங்கில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜியு ஜியாகுன் கூறியதாவது:
ரஷியாவுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம் சீன நலனும், சீன நிறுவனங்களின் நலனும் பாதுகாக்கப்படுகின்றன. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் எப்போதும் ரஷியாவுடன் வா்த்தக உறவைப் பேணி வருகின்றன. இப்போது, ரஷியாவுடம் இந்த நாடுகள் தொடா்ந்து வா்த்தகம் செய்துதான் வருகின்றன.
எந்த ஒரு மூன்றாவது நாட்டுக்கு எதிராகவும் சீனா ஒருபோதும் செயல்பட்டது இல்லை. பிற நாட்டு விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவது இல்லை. எங்கள் நாட்டின் நலனைப் பாதுகாக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது என்றாா்.