
தேடுபொறி தளமான கூகுள், ஒன்றைத் தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொண்டு முடிவுகளை அளிக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அதன் பின்னால் வெறும் தொழில்நுட்பம்தான் இருக்கிறதா? அல்லது யாரேனும் பணியாற்றுகிறார்களா என்ற சந்தேகமும் எழும்.
கூகுள் தேடுபொறி தளம், வெப் க்ராலர்ஸ் எனப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான இணையதளங்களில் இருக்கும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஸ்கேன் செய்து, பட்டியலிட்டு வைத்துக் கொள்கிறது.
ஒருவர் கூகுள் இணையதளம் வந்து ஒரு விஷயத்தைத் தேடும்போது, இந்த பட்டியலில், அவர் தேடுவதற்கு மிக நெருக்கமான ஒரு முடிவை இணையதளத்தில் காட்டுகிறது.
ஆனால், இந்த பட்டியலிடுவதில் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சின்ன தவறு நேர்ந்தாலும், தேடிக் கிடைக்கும் முடிவில் மிகப்பெரிய சங்கடத்தை சந்திக்க நேரிடலாம்.
இதுபோன்ற ஒரு சங்கடம்தான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்துக்கு நேர்ந்துள்ளது. அதாவது, கூகுளில் யாராவது இடியட் என்று ஆங்கிலத்தில் தேடும்போது, கிடைக்கும் ஏராளமான புகைப்படங்களில் டொனால்ட் டிரம்ப் புகைப்படமே முன்னிலை வகிக்கிறது.
இது தொடர்பாக நீதிமன்ற விசாரணையின்போது, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் விடியோ அண்மையில் சமூக ஊடகத்தில் வைரலாகியிருந்தது.
அந்த விடியோவில், இது எவ்வாறு நிகழும்? தேடுபொறி எவ்வாறு செயல்படுகிறது, ஏன் இவ்வாறு ஏற்பட்டது? என்று நீதிபதி கேள்வி எழுப்புகிறார். இதற்கு சுந்தர் பிச்சை அளித்த பதிலில், கூகுள் இணையதளத்தில், எந்த தேடுதல் முடிவுகளும் மனிதர்களால் அல்லது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்படுவதில்லை. ஏற்கனவே, இணையதளத்தில் புகைப்படம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பெயர்களை கூகுள் ஸ்கேன் செய்து பட்டியலிட்டு வைத்திருப்பதையே, தேடும்போது முடிவுகளாகக் காட்டுகிறது. இணையதளத்தில் மக்கள் என்ன சொல்கிறார்கள், சேர்க்கிறார்கள், தேடுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அதிக பயனர்கள், டிரம்ப் புகைப்படத்துடன் இந்த வார்த்தையை இணைக்கும்போது அதனை தேடுதலின் முடிவாகக் காட்டுகிறது.
கூகுளின் தேடுபொறி என்ஜினில், ஆயிரக்கணக்கான கீவேர்டுகள் மற்றும் புகைப்படங்களை ஸ்கேன் செய்து கூகுள் பட்டியலிட்டு வைத்திருக்கும். பிறகு, அது தேடும் வார்த்தையுடன் தொடர்புடைய, புதிதாகப் பதிவிடப்பட்ட, அதிகம் பதிவிடப்பட்டவை என தொகுத்து, அதிலிருந்துதான் முடிவுகளைக் காட்டும் என சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்ட நீதிபதி சிரித்தபடி, அப்போது, ஒரு சிறிய மனிதன், திரைக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு மக்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில்லையா? என்று கேட்கிறார்.
இதற்கு பதிலளித்த சுந்தர், கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கோடி தேடுதல் கூகுளில் நடந்துள்ளது. எனவே, இவற்றை எல்லாம் மனிதர்களால் தேடி எடுத்து முடிவுகளைக் கொடுக்க முடியாது என்றார்.
இதனை கூகுள் பூம்பிங் என்று அழைப்பர், இது மக்கள் இணையத்தில் பதவிடுவதை வெளிப்படுத்துகிறது, தேடுபொறி தளம் சொந்தமாக எந்தக் கருத்தையும் உருவாக்குவதில்லை. இணையதளத்தில் வரும் கருத்துகளைத்தான் தொகுக்கிறது என்று இதனுடன் கருத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பே, கூகுள் தவறான தகவல்களை காட்டுவதாகவும், தனது கட்சிக்கு எதிராக கூகுள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. வரலாறாகிறது மிக்21! சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இறுதி சல்யூட்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.